பாக். தீவிரவாத முகாம்களை தாக்க வேண்டும் – ஒபாமாவிடம் பென்டகன் வேண்டுகோள்

வாஷிங்டன்: பாகிஸ்தானில் இருக்கும் தலிபான் மற்றும் அல் கொய்தா முகாம்களை அழிக்காமல், ஆப்கானிஸ்தானில் இருந்து தீவிரவாதத்தை அழிக்க முடியாது. இதனால் அம்முகாம்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என பென்டகன் அதிபர் ஒபாமாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் தலிபான்களை முற்றிலுமாக அழிக்க, அமெரிக்க அரசு கடுமையாக போராடி வருகிறது. பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தலிபான் மற்றும் அல் கொய்தா முகாம்கள் மீது அவ்வவ்போது ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேநேரத்தில் தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் அழிக்கவும் உதவி வருகிறது. இதற்காக அவர்களுக்கு ராணுவ உதவி தொகையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான், தீவிரவாதிகளை ஒழிக்க மந்தம் காட்டி வருவதாகவும், அதனால் அமெரிக்க அரசு நேரிடையாக பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க பாதுகாப்பு துறை தலைமை செயலகமான பென்டகன் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பென்டகன் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒபாமா அரசு ஆப்கானிஸ்தான் குறித்த தனது கொள்கையில் விரைவில் மாற்றம் கொண்டு வரும். பாகிஸ்தானில் இருக்கும் தலிபான் மற்றும் அல் கொய்தா முகாம்களை அழிக்காமல், ஆப்கானிஸ்தானில் இருந்து தீவிரவாதத்தை அழிக்க முடியாது.

இதனால் பாகிஸ்தான் அரசுடன் இணைந்து அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்த வேண்டும். இது விரைவில் நடக்க வேண்டும் என்றார்.

இது குறித்து பென்டகன் செய்திதொடர்பாளர் பிரயன் விட்மேன் கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் அமைதி சீர்குலைந்து போவதற்கும், பாகிஸ்தான் உள்ள சில தீவிரவாத முகாம்களுக்கும் தொடர்பு இருக்கிறது. இந்த முகாம்களில் இருந்து தீவிரவாதிகள் எளிதாக ஆப்கானிஸ்தான் சென்றுவிடுகின்றனர் என்றார் அவர்.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.