நோர்வேயில் தீப்பந்தப் பேரணி: 5 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்பு

உடனடி போர் நிறுத்தத்தினைக் கோரியும், தமிழின அழிப்பினை நிறுத்தவும், சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும், தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும், நோர்வே உட்பட்ட இணைத்தலைமை நாடுகளின் நீதியற்ற நடவடிக்கையைக் கண்டித்தும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மாபெரும் தீப்பந்தப் பேரணி நடைபெற்றது.

கடும் பனித்தூறலுக்கும் உடல்வெட்டும் குளிருக்கும் மத்தியிலும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான நோர்வே வாழ் தமிழர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

ஒஸ்லோ Youngstorget இலிருந்து நேற்று புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு தொடங்கிய பேரணி, நோர்வே நாடாளுமன்றத்தைச் சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டத்துடன் இரவு 8:00 மணிக்கு நிறைவடைந்தது.

நோர்வே பிரதான கட்சிகளில் ஒன்றான வலதுசாரிக் கட்சியின் தலைவர் அர்ணா சூல்பர்க், தொழிற்கட்சியின் முக்கிய உறுப்பினரும் ஒஸ்லோ நகரசபை உறுப்பினருமான துறொண்ட் ஜென்ஸ்றூட், நோர்வேஜிய தொழிற்சங்க ஒஸ்லோ பிரதேச துணைத்தலைவர் ஆர்ண ஹாலோஸ் மற்றும் செங்கட்சியைச் சேர்ந்த விஜொணார் மொக்ஸ்னஸ் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினர்.

தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை ஆதரிப்பதாகத் தெரிவித்த வலதுசாரிக் கட்சியின் தலைவர் அர்ணா சூல்பர்க், பொதுமக்களின் உயிர்ப்பலிகள் நிறுத்தப்படுவதே இன்றையை அவசர தேவை என்று குறிப்பிட்டார்.

உடனடி போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு, நீதியான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பேரணியில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள்

சிறிலங்கா அரசை கண்டனம் செய்

சிறிலங்காவிற்கு 61 ஆவது ஆண்டு சுதந்திர நாள்! தமிழினத்திற்கு 61 ஆண்டு கால அடக்குமுறை வாழ்வு

சிறிலங்கா ஒரு பயங்கரவாத தேசம்

தமிழின அழிப்பினை நிறுத்து

இணைத்தலைமை நாடுகளே

தமிழின உரிமைக்காக போராடும் விடுதலைப் புலிகள் மீது அழுத்தம் பிரயோகிக்காதே!

தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொள்

புலிகளே தமிழர்களின் பாதுகாவலர்

எங்கள் போராட்டம் சுதந்திரத்திற்கானது

போன்ற பதாகைகளைத் தாங்கி நின்றதோடு அவற்றை முழக்கங்களாகவும் எழுப்பினர்.

தமிழீழத் தேசியக் கொடி மற்றும் தேசியத் தலைவரின் உருவப்படங்களையும் மக்கள் தாங்கி நின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கக் கோரிய இணைத் தலைமை நாடுகளின் நிலைப்பாடு மீது கண்டனமும் எழுப்பப்பட்டது.

நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தினால், வலது சாரிக்கட்சி தலைவர் அர்ணா சூல்பர்க் மூலம் நோர்வே அரசாங்கத்திற்கு கோரிக்கை மனுவொன்று கையளிக்கப்பட்டது.

அம்மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

சிறிலங்காவினால் நிகழ்த்தப்படும் பாரிய மனிதப் பேரவலத்திற்கு உலகம் சாட்சியமாக விளங்குகின்றது. நாளாந்தம் பல பத்து உயிர்கள் படுகொலை செய்யப்படுகின்றன.

நோர்வே மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகிய இணைத்தலைமை நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம், போரை நிறுத்தி, தமிழீழ விடுதலைப் புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய புறச்சூழலை ஏற்படுத்த முடியும்.

ஆனால், அதற்கு மாறாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுங்களை கைவிட வேண்டும் எனும் அறிக்கையினை நேற்று முன்னாள் நோர்வே மற்றும் இணைத்தலைமை நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ளன.

இந்த அறிவிப்பு தமிழ் மக்களாகிய எமக்கு கடும் கோபத்தையும் பெருத்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அரச பயங்கரவாத்திற்கும் தமிழின அழிப்பிற்கும் எதிரான இறுதி வழியாகவே தமிழீழ மக்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றது.

தமிழ் மக்களின் இருப்பிற்கும், உரிமைகளுக்கும் உறுதியளிக்கப்படாத, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் கருத்திலெடுக்கப்படாத புறநிலையில், தமிழ்த் தேசிய இனத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலை அமைப்பிடம் ஆயுதங்களைக் கைவிடுமாறு கோருவது என்பது, எமது மக்கள் மீது நிகழ்த்தப்படும் அரச பயங்கரவாதத்தையும் இன அழிப்பினையும் ஆதரிப்பதான செயலாகும்.

இந்த நிலைப்பாடு ஒருபோதும் நீதியான நிரந்தரமான சமாதானத்திற்கு இட்டுச்செல்லாது.

சிறிலங்கா தேசம் பிரித்தானிய கொலணி ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற 61 ஆவது சுதந்திர நாளை இன்று (நேற்று) கொண்டாடியது.

1948 இல் தமிழ் தேசிய இனத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த சிங்கள பெரும்பான்மை இனத்தின் கைகளில் கையளித்தது பிரித்தானியா.

இலங்கைத்தீவின் இன்றைய இன முரண்பாட்டிற்கு அடித்தளம் பிரித்தானியாவினால் இடப்பட்டதாகும். எனவே, சிறிலங்காவின் 61 ஆவது ஆண்டு சுதந்திர நாள், தமிழர்களுக்கு 61 ஆண்டுகால அடக்குமுறை வாழ்வின் குறியீட்டு நாளாகும்.

ஆயிரமாயிரமாக இங்கு திரண்டுள்ள நோர்வே தமிழ் மக்களாகிய நாம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான எமது ஆதரவினை வெளிப்படுத்துவதோடு, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையையும் வலியுறுத்தி நிற்கின்றோம் என்று அம்மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam .com

Leave a Reply

Your email address will not be published.