ஜ.நா. முன்பாக ஆர்ப்பரித்த தமிழர்களின் பேரெழுச்சியினால் செயலிழந்த ஜெனீவா நகர்

அழிக்க நினைத்தால் அலை கடலாக எழுவோம் என ஜக்கிய நாடுகள் சபையின் முன்றலை ஆக்கிரமித்த வரலாற்றுப் பதிவில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கலந்துகொண்டு சிங்கள அரசின் 61 ஆவது சுதந்திர நாளினை தமிழரின் கறுப்பு நாளாய் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

ஈழத் தமிழினத்தின் மீது சிங்கள அரசு மேற்கொண்டு வரும் இன அழிப்பு போர், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என முன்னெடுக்கும் நில ஆக்கிரமிப்பு போர் போன்றவற்றினால் சோகச் சுமைகளைத்தாங்கி ஆற்றொணாத ஆதங்கத்தில் தவித்த சுவிஸ் தமிழ் சமூகம் ஒன்று திரண்டு தமது கட்டுக்கடங்கா உணர்வலைகளை ஜக்கிய நாடுகள் சபையின் முன்றலில் வெளிப்படுத்த ஒன்றுகூடியது.

இதனால், சுவிசின் இராஜதந்திரத் தலைநகரான ஜெனீவா மாநிலம் பல மணி நேரம் செயலிழந்திருந்தமை ஓர் வரலாற்றுப் பதிவாகியுள்ளது.

சிங்கள அரசாங்கத்தின் 61 ஆவது வருட சுதந்திர நாளை தமிழர் வாழ்வின் துயர்நாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

“அழிவிலும் எழுவோம்” என்ற குறியீட்டுப் பெயருடன் சுவிஸ் தமிழ் இளையோர்களை முன்னிறுத்தி சுவிஸ் தமிழ் அமைப்புக்கள் ஒன்றினைந்து இந்த ஒன்றுகூடலை முன்னெடுத்திருந்தனர்.

இதில் கலந்துகொண்ட மக்கள் தாயக மக்களின் இன்றைய அவல நிலையை போக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுக்கும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் எனக் கோரும் தமது முன்மொழிவுகளை தீர்மானங்களாக்கி ஜக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு மனுவாகக் கையளித்திருந்தனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அமைதி வழி ஒன்றுகூடல்கள், கண்டனப்பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என்று நடத்திய நாம் ஐக்கிய நாடுகள் சபையையும் சுவிஸ் அரசினையும் சுவிஸ் மக்களையும் மதித்தே வந்திருக்கின்றோம்.

ஆனாலும் எம் இனத்தையே இல்லாதொழிக்கும் நோக்கில் மூர்கத்தனமான போரை தொடுத்திருக்கும் சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்பு நடவடிக்கையை தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபை பாராமுகமாக இருப்பதை அனுமதிக்க மாட்டோம் என முழக்கமிட்டவாறு ஜக்கிய நாடுகள் சபையின் பிரதான நுழைவாயிலை மக்கள் சூழ்ந்து கொண்டனர்.

ஜக்கிய நாடுகள் சபையின் முன்றலை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதிகளில் அமர்ந்தவாறு தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தமது முற்றுகை, வீதி மறியல் போராட்டத்தை நிறுத்தமாட்டோம் என முழக்கமிட்டவாறு தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மக்களின் பேரெழுச்சியையும் கோபக் கொந்தளிப்புக்களையும் புரிந்து கொண்ட ஜக்கிய நாடுகள் சபையின் உயரதிகாரிகள் மக்கள் கூடி முற்றுகை செய்த பகுதிக்கு வந்து ஏற்பாட்டாளர்களிடம் அளித்த வாக்குறுதிக்கு அமைய, மக்கள் தமது கட்டுக்கடங்கா கோபத்தை உள்வாங்கியவாறு, தமது ஒன்றுதிரண்ட அதிர்வலைகளை முழக்கங்களாக்கி இந்த ஒன்றுகூடலை நிறைவு செய்தனர்.

தன் இனம் அழியும் போது எப்படி இஸ்ரேலியர்கள் அனைத்துலகத்தின் இராஜதந்திர பிரதேசங்களை முற்றுகையிட்டு தமது உரிமைக்காக போராடினார்களோ அதேபோன்றே புலம்பெயர் வாழ் தமிழ் மக்களும் தாம் வாழும் நாடுகளிம் பிரதான நகரங்களில் பேரெழுச்சி கொண்டு தமிழின அழிப்பு போருக்கு எதிரான, நடவடிக்கைகளில் ஈடுபடுவதைப் போன்று சுவிஸ் வாழ் தமிழ் மக்களும் தமது ஆதங்கத்தை ஜக்கிய நாடுகள் சபையின் முன்றலில் வெளிப்படுத்தினர்.

இந்த மக்களின் உணர்வைகளை ஏற்பாட்டாளர்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இருந்ததை அவதானித்த காவல்துறையினரும் மக்களின் ஆதங்கங்களை புரிந்து கொண்டு அவர்களின் கோபக் கனல் தணியும் வரை பூரண ஒத்துழைப்பு வழங்கியதுடன் அந்த மக்களின் ஆதங்கத்தையும் உணர்ந்து கொண்டதையும் அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பில் இருந்து உணர முடிந்தது.

தாயக மக்களின் உரிமைப் போருக்காய் ஆதரவு கோரி தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்ணெடுத்து வரும் தமிழ் இளையோர்களின் துடிப்பு மிக்க போராட்டத்தின் வெளிப்பாடாய் முன்னறிவிப்பு எதுவுமின்றி தொடங்கப்பட்ட உண்ணாநிலை போராட்டம் ஒவ்வொரு சுவிஸ் தமிழ் மக்களின் மனங்களுக்குள்ளும் தமிழ்த் தேசிய எழுச்சியை உருவக்கியுள்ளது.

இதன் விளைவே ஜக்கிய நாடுகள் சபையின் முன்பாக 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களை குறுகிய கால ஏற்பாட்டில் ஒன்று திரள வைத்தது என சுவிசின் தேசிய ஊடகங்கள் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டுள்ளன .

பல்மொழிகளின் ஊடாக தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொணரும் உரைகளும் முழக்கங்களும் வெளிப்படுத்தப்பட்டதுடன் தமிழர் பேரவையின் பேச்சாளரான சண். தவராஜா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளை கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் பிரான்சிஸ் அல்பேட் ஆகியோரின் சிறப்புரைகள் இடம்பெற்றன.

ஆக்ரோசத்துடன் தமது உறவுகளின் அவலநிலையை எடுத்துக்கூறிய மக்கள் இனவெறி கொண்டு அரக்கத் தாண்டவம் ஆடும் சிங்கள அரசின் தலைவர் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவியை ஐக்கிய நாடுகள் சபையின் நாற்புற வீதிகளிலும் இழுத்துச் சென்றதுடன் சிங்கக்கொடியை தீயிட்டும் கொளுத்தி சிங்கள அரசின் இனவெறி மீது தாம் கொண்ட வெறுப்பை வெளிக்காட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.