திகார் சிறை பிரட்டுக்கு வெளிநாடுகளில் மவுசு

புதுடில்லி:டில்லி திகார் சிறைக் கைதிகள் தயாரிக்கும் பிரட் உட்பட பேக்கரி உணவுப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் மவுசு ஏற்பட்டுள்ளது.தெற்காசியாவில் மிகப்பெரியது திகார் சிறை. இதில், 11 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு கைத்தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, தினமும் வேலை செய்ய வைக்கப்படுவர்.

அதற்கு அவர்களுக்கு ஊதியமும் அளிக்கப்படும்.சிறையில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு நிலையமும் உள்ளது. இதற்காக கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பிரட், சிப்ஸ், பிஸ்கட் போன்ற பேக்கரி பொருட் கள் தயாரிக்கப்படுகின்றன.காந்தி ஸ்மிருதி அமைப்புகள், டில்லி தலைமைச் செயலகம் உட்பட சில வட மாநில நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்குத் தான் இந்த பேக்கரி பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. இதனால், ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் விற்பனை நடக்கிறது. திகார் சிறையில் தயாரிக்கப்படும் பேக்கரி பொருட்களுக்கு சர்வதேச தரச் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், வெளிநாடுகளில் இவற்றுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் இருந்து இந்த பொருட்களை சப்ளை செய்து அனுப்பும்படி கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.இது குறித்து திகார் சிறை கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா கூறுகையில், “வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் பேக்கரி பொருட்களின் விலையை விட, பாதி விலையில் தான் இந்த பேக்கரி பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

“டிஜே'(திகார் ஜெயில்) என்ற பிராண்ட் பெயரில் தயாரிக்கப்படும் இந்த உணவுப் பொருட்களுக்கு, “வெளிநாடுகளில் இருந்து இப்போது அதிக வரவேற்பு கிடைத்துள் ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களைக் கண்டறிய டெண்டர்கள் விடப்படும்’ என்று தெரிவித்தார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.