மீண்டும் மருத்துவமனை மீது தாக்குதல் : பிரபாகரன் பதுங்கு குழி கண்டுபிடிப்பு கொழும்பில் உஷார் நிலை

கொழும்பு: புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது இலங்கை ராணுவம் மீண்டும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் இறந்தனர், ஆறு பேர் படுகாயம் அடைந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை கைப்பற்ற ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. முல்லைத் தீவு மாவட்டத்தில் தற்போது புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய பகுதியில் 2.5 லட்சம் அப்பாவி மக்கள் சிக்கியுள்ளனர். இவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற, இலங்கை அரசு 48 மணி நேரம் அவகாசம் அளித்தது. பெரும்பாலான மக்கள் அங்கிருந்து வெளியேறவில்லை.
இதையடுத்து, புலிகளுக்கு எதிரான தாக்குதலை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் முல்லைத் தீவில் புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவில் நடந்த இந்த தாக்குதலில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒன்பது அப்பாவி மக்கள் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இலங்கை ராணுவமும்,புலிகளும் தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என மறுத்தனர்.

மூன்று முறை தாக்குதல்: இந்நிலையில், புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது இலங்கை ராணுவம் நேற்று முன்தினம் மீண்டும் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் கூறுகையில்,”முல்லைத் தீவில் சண்டை நடக்கும் பகுதியில் இந்த ஒரு மருத்துவமனை மட்டுமே இயங்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்குள் இந்த மருத்துவமனை மீது மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. தற்போது நடந்த தாக்குதலில் அங்கு மூவர் இறந்தனர் .சிகிச்சை பெற்று வந்த ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்’என்றனர்.

இந்த தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என இலங்கை ராணுவம் மறுத்துள்ளது.சண்டை நடக்கும் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் தர முடியாது என இலங்கை அரசு வெளிப்படையாக தெரிவித்து விட்ட நிலையில், அப்பாவி மக்களின் உயிருக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் தாக்குதல் மேலும் தீவிரமடையும் நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.கொழும்பில் உஷார் நிலை: இலங்கையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் விடுதலைப் புலிகள் வான் வழி தாக்குதல் நடத்தலாம் என உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இதையடுத்து, கொழும்பு நகரம் முழுவதும் ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகருக்கு மேல், போர் விமானங்கள் தொடர்ந்து வட்டமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. “எந்த வகையான வான் வழி தாக்குதலையும் முறியடிக்கும் வகையில் ராணுவம் தயாராக உள்ளது’என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ராஜபக்ஷே ஆவேசம்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”இலங்கையில் விரைவில் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்படும். அதற்கான இறுதிக் கட்ட முயற்சிகள் நடந்து வருகின்றன. பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட்டிய பின், வடக்கு பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்படும்’என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுங்கு குழி கண்டுபிடிப்பு : இலங்கை ராணுவ அமைச்சகம் கூறியதாவது:முல்லைத் தீவில், அதி நவீன வசதிகளுடன் கூடிய பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது. சுற்றிலும், தென்னை மரங்கள் சூழ்ந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் இந்த பதுங்கு குழி, 50 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பதுங்கு குழி முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ரகசிய கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தரைத் தளம் முழுவதும் டைல்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இங்கு விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் அடிக்கடி வந்து தங்கியுள்ளதாக தெரிகிறது. ஏராளமான மருந்து பொருட்கள், துப்பாக்கிகள் ஆகியவையும் இருந்தன. ஜெனரேட்டர் வசதியும் உள்ளது. நீண்ட நேரச் சண்டைக்கு பின் இந்த பகுதியை ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இந்த சண்டையில் 20 புலிகள் கொல்லப்பட்டனர்.இவ்வாறு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.