மணிசங்கர அய்யர் வழிமறிப்பு- கருப்புக் கொடி – கல்வீச்சு

சீர்காழி: மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரின் காரை சீர்காழி அருகே வழிமறித்த இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தினர். சிலர் கார் மீது கல்வீசித் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய பஞ்சாயத்துராஜ் மற்றும் வடகிழக்கு மாநில மேம்பாட்டுத்துறை அமைச்சரும், மயிலாடுதுறை தொகுதி எம்.பி.யுமான மணிசங்கர் அய்யர் நேற்று நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் வட்டார செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு சீர்காழியில் நடைபெற இருந்த நகர மற்றும் வட்டார செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சீர்காழி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பா.ம.க. மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வேலு. குணவேந்தன், ம.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மார்க்கோனி, பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பெரியார் செல்வம் ஆகியோர் கொள்ளிடம் முக்கூட்டில் மாலை 3.30 மணிக்கு திடீரென மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர் காரை வழிமறித்து கறுப்புக் கொடி காட்டினர்.

மத்திய அரசு இலங்கைக்கு ராணுவ உதவி செய்யக்கூடாது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டவையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முற்பட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. சிலர் கார் மீது கல்வீசித் தாக்கினர். இதனை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை
தடியடி நடத்திக் கலைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக 16 பேரை போலீஸார் கைது செய்தனர். அதன் பிறகு பலத்த பாதுகாப்போடு மணிசங்கர அய்யர் சீர்காழி புறப்பட்டுச் சென்றார்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Source & Thanks : www.aol.in

Leave a Reply

Your email address will not be published.