சிறிலங்கா வான்படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி: இந்தியாவின் இரட்டை வேடம் மீண்டும் அம்பலம்

தமிழ்நாட்டில் உள்ள தாம்பரத்தில் சிறிலங்கா வான்படையைச் சேர்ந்த 8 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் தங்களுடைய விசாவை பதிவு செய்ய சேலையூர் காவல் நிலையத்துக்கு சென்றதால் சிறிலங்கா வான்படையினருக்கு இந்தியா பயிற்சி வழங்குவது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவமும், வான் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி தமிழர்கள் பலியாகி வருவதால் போரை நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தாம்பரத்தில் உள்ள இந்திய வான்படை பயிற்சிப் பிரிவில் சிறிலங்கா வான்படையைச் சேர்ந்த 8 பேர் பயிற்சிக்காக சென்றுள்ளனர்.

வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவில் தங்கி இருந்தால் அப்பகுதி காவல் நிலையத்தில் விசா உள்ளிட்ட ஆவணங்களை காட்டி பதிவு செய்வது அவசியமாகும்.

இதனால் சிறிலங்கா வான்டையைச் சேர்ந்த 8 பேரும் வான்படையின் வாகனத்தில் சேலையூர் காவல் நிலையத்துக்கு சென்றனர். இவர்களுடன் இந்திய வான்படை அதிகாரிகள் 2 பேரும் சென்றனர்.

காவல் நிலையத்தில் பெயர்களை பதிவு செய்தபிறகு உடனடியாக அவர்கள் அங்கிருந்து தாம்பரம் வான்படை தளத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

இலங்கை பிரச்சினை உச்சகட்ட நிலையில் இருக்கும்போது, சிறிலங்கா வான்டையினர் சீருடையோடு சேலையூர் காவல் நிலையம் நிலையம் சென்றது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய வான்படையில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிப்பது வழக்கமான ஒன்று தான் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.