வன்னி மக்கள் மீது “வெள்ளை பொஸ்பரஸ்” எரிகுண்டுத் தாக்குதலை நடத்துகின்றது சிறிலங்கா?

வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களின் மீது கடந்த சில நாட்களாக சிறிலங்கா படையினர் வெள்ளை பொஸ்பரஸ் (white phosphorus shells) சேர்க்கப்பட்ட அதியுயர் வெடிமருந்து கொண்ட எறிகணைகளை (எரிகுண்டுகளை) பீரங்கிகள் மூலம் ஏவி வருகின்றது போல அப்பிரதேசங்களை அவதானிக்கும் போது தெரிவதாக அங்கிருந்து “புதினம்” செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வன்னியில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் செறிவாக வாழும் பிரதேசங்கள் மீது சிறிலங்கா படையினர் புதிய ரக எரிகுண்டுகளை பீரங்கிகள் மூலம் வீசித் தாக்குகின்றனர்.

இந்த எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் இடங்களில் – மனித உடல்களும், கட்டடங்களும், மரங்களும் கூட தீப்பற்றி எரிவதுடன் பாரிய சேதங்களும் ஏற்படுகின்றன.

சிறிலங்கா படையினர் வெள்ளை பொஸ்பரஸ் (white phosphorus shells) சேர்க்கப்பட்ட அதியுயர் வெடிமருந்து கொண்ட எரிகணைகளை பீரங்கிகள் மூலம் ஏவுவது போல தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களை ஆராயும் போது தெரிவதாக எமது செய்தியளர் தெரிவிக்கின்றார்.

“காசா” பகுதியில் நடத்தப்பட்ட எரிகுண்டுத்தாக்குதல் படம்

அனைத்துலக விதிகளின் அடிப்படையில் பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் இந்த வகை எறிகணைகள் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த வகை எறிகணைகள் பொதுமக்களுக்கு பாரிய எரிகாயங்களை ஏற்படுத்துவதனால் 1980-களில் உருவாக்கப்பட்ட ஜெனீவா சட்ட விதிகளிலும் (Under the Geneva Treaty of 1980) இந்த ஆயுதங்கள் பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் பயன்படுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு இதனை இராசாயன ஆயுதங்களின் பட்டியலில் சேர்த்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வெள்ளை பொஸ்பரஸ் எறிகணைகள் வெடிக்கும் போது பாரிய புகை மண்டலங்களையும், தீயையும் உருவாக்கும் தன்மை கொண்டவை. இதன் போது ஏற்படும் எறிகணை சிதறல்கள் மனிதர்களின் தோல்களில் ஒட்டி எரிவதுடன், அதன் இரசாயனப் பொருள் உடலினுள் பரவும் தன்மையும் கொண்டதாகும்.

வளிமண்டலத்தில் ஒக்சிசன் போதியளவில் இருக்கும் வரையிலும் பொஸ்பரஸ் துகள்கள் தொடர்ந்து எரியும் தன்மை கொண்டவையாகும்.

முன்னர், வியட்நாம் போரின் போது அமெரிக்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட இந்தவகை எறிகணைகள், அண்மையில் இஸ்ரேலிய இராணுவத்தினரினால் காசா பகுதியிலும் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.