”என்னிடம் பேச பயப்படுகிறார்கள்!” : சீமானின் கோபம்! -ஆனந்த விகடன் நேர்காணல்.

”என்னிடம் பேச பயப்படுகிறார்கள்!” : சீமானின் கோபம்! -ஆனந்த விகடன் நேர்காணல்.

சீமான்… காங்கிரஸின் கசப்பு மருந்து. அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கதர் கூடாரத்தில் கண்டனம் எழுகிறது. ஈழத்தில் செத்து மடியும் தமிழனுக்காகக் குரல் கொடுத்து, கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு தடவை கைதானவர். ராமேஸ்வரம் பேச்சுக்கு மதுரையில் 10 நாட்கள், ஈரோட்டு முழக்கத்துக்கு கோவையில் 32 நாட்கள் என சிறை வாழ்விலிருந்து மீண்டு இப்போது ஜாமீனில் வந்திருக்கிறார். ஆனாலும், அதே ஆக்ரோஷம்!

”சிறை அனுபவம்..?”

”வெளியில் தமிழன் வெறுமனே கிடக்கும்போது உள்ளிருக்கும் தமிழன் உணர்ச்சிப் பிழம்பாகத் தகிக்கிறான். ‘சொந்தக் காரணங்களுக்காக நாங்க இங்கே இருக்கோம். நீங்க தமிழனுக்காக வந்திருக்கீங்க’ என்று கைதிகள் அத்தனை பேரும் கை கொடுத்தார்கள். பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோருடன் சிறையில் இருந்தது என்னுடைய பேறு!”

”காங்கிரஸ் கட்சி உங்கள் மீது அதிகப்படியான கோபத்தைக் காட்டுகிறதே?”

”அதைவிட அவர்கள் மீது எனக்கு அதிகக் கோபம் இருக்கிறது. சில கல் தொலைவில் என் உறவுகள் கஞ்சிக்குச் செத்து, காட்டுக்குள் தஞ்சம் புகுந்து, எப்போது தலையில் குண்டு விழுமோ என்று தவித்துக்கிடக்கும் சோகத்தை, மேடை போட்டுச் சொல்கிற சீமான் பயங்கரவாதியாம். என் வீட்டு வாசலில் நின்ற காரைக் கொளுத்தி தீபாவளி கொண்டாடிய காங்கிரஸ் காரர்கள் மிதவாதிகளாம். நான் பேசும் கருத்து தவறு என்றால், நீயே மேடை போடு. நான் வருகிறேன். பதில் சொல். அதை விட்டுவிட்டு காரைக் கொளுத்துவது, கைது செய்யச் சொல்லி ஈனஸ்வரத்தில் சுப்ரபாதம் பாடுவதெல்லாம் பாரம்பரியக் கட்சிக்கு அழகா?

என் அப்பனும் ஆத்தாளும் காலங்காலமாக ஓட்டுப் போட்ட சின்னம் கை சின்னம். எனக்கு யாரும் தேசியத்தைக் கற்றுத்தர வேண்டியதில்லை. எனது சொந்தங்களில் பலர் எல்லையைக் காக்க நின்றுகொண்டு இருக்கிறார்கள். எனக்குத் தேசபக்தியைக் கற்றுத் தரும் காங்கிரஸ்காரர்கள் வீட்டில் எத்தனை பேர் ராணுவத்தில் இருக்கிறார்கள்? பட்டியல் தருமா சத்தியமூர்த்தி பவன்? 40 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாத இயலாமையில் புலம்புகிறார்கள். விட்டுத் தள்ளுங்கள்!”

‘‘ராஜீவ் மரணத்தை அவர்கள் ஒரு காரணமாகச் சொல்கிறார்களே?”

”ராஜீவ் மரணம் கொடுமையானது. அதில் சந்தேகமே இல்லை. அதைவிடக் கொடுமையானது அமைதிப் படை செய்தவை. ராஜீவைக் கொன்றவர்களைப் பற்றி மட்டும் பேசுகிறீர்களே… காந்தியைக் கொன்றவர்களைப் பற்றி, இந்திராவைக் கொன்றவர்களைப் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்? எந்தப் பிழையும் கடந்து போகும். எந்தக் காயமும் ஒரு நாள் ஆறும். அது ஓர் இழப்பு. அந்த இழப்புக்காக ஓர் இனம் நித்தமும் சாவதை எப்படிச் சமப்படுத்துகிறீர்கள்?”

”அமைதிப் படை விவகாரங்களை இப்போது கிளப்பித் தேவையில்லாத சிக்கல்களை நீங்கள் உருவாக்குவதாகச் சொல்கிறார்களே?”

”தேவையானதைத்தான் நான் பேசுகிறேன். ராஜீவ் காந்தி கொலையைப் பற்றி பேசினால் அமைதிப் படையின் கொடுமைகளைப் பற்றியும் பேசித்தான் ஆக வேண்டும். அதை எம் தமிழன் ஏற்பதால்தானே ஆயிரக்கணக்கில் கூடுகிறான்? என் குரலுக்கு மரியாதை இல்லையென்றால், பொருட்படுத்த வேண்டாம். ஏன் ‘கைது செய், கைது செய்’ என்று கத்துகிறீர்கள். என் பேச்சு, இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தா? எனக்கு அவ்வளவு செல்வாக்கா? காங்கிரஸ் சொன்ன பிறகுதானே எனது பலம் எனக்குத் தெரிகிறது.”

”வெறுமனே உணர்ச்சிவயப்பட்டுப் பேசுவதால் என்ன லாபம் என்கிறார்களே?”

”உணர்ச்சி இருப்பதால் வயப்படுகிறேன். இல்லாதவர்கள் என்னைத் திட்டுகிறார்கள். பேசாமல் எனது பிரச்னையை எப்படிச் சொல்ல முடியும்! இலங்கை ஜனநாயக நாடல்ல, அது மதச் சர்வாதிகார நாடு என்று எடுத்துச்சொல்வது உணர்ச்சிவயப்படுவதா? அறிவும், ஆற்றலும், புலமையும், திறமையும் வாய்ந்த தமிழ்த் தலைவர்களை ஒரு காட்டுமிராண்டி, கோமாளி என்று திட்டும்போது உணர்ச்சியற்ற பிண்டமாக என்னால் இருக்க முடியாது.”

”இலங்கையை மதச் சர்வாதிகார நாடு என்றீர்கள். அங்கு பாதிக்கப்படுவது இந்துக்கள் என்று சொல்லி பாரதிய ஜனதா ஆதரவு தெரிவிப்பதை ஏற்கிறீர்களா?”

”நான் சாதி, மதத்துக்கு எதிரானவன். ஆனால், என் இனத்தவன் சாகும்போது அவனுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அதை என்னால் புறந்தள்ள முடியாது. காங்கிரஸ் செய்யத் தவறியதை, இல.கணேசன் சொல்லி வருவது வரவேற்கத்தக்கது.”

‘‘ஒரு சினிமாக்காரர் தனது படங்களின் மூலம் பேசப்படுவதைத் தாண்டி, அதீத அரசியல் ஆர்வம்கொள்வது சரியா?”

”நான் என் சுயநலத்துக்காகவோ, எனக்கு ஓட்டு கேட்டோ பேசவில்லை. என் இனத்துக்காகப் பேசுகிறேன். பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர், பிரபாகரனைப் படித்த என்னால் எப்படிச் சும்மா இருக்க முடியும்? இலங்கை நிலவரங்களை நினைத்தால் கண்மூடித் தூங்க முடியவில்லை. படம் எடுப்பதுதான் என் தொழில். ஆனால், தமிழன் அல்லல்படும்போது படம் எடுத்துக்கொண்டு இருக்க முடியாது. இதையெல்லாம் பேசுவதால் என் தொழில் பின்னடைவு ஆவது உண்மைதான். என் நண்பர்களே என்னிடம் பேசப் பயப்படுகிறார்கள். 32 நாட்களாகப் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. என் உணர்வு அறிந்த தம்பிகள் என்பதால் காத்திருந்தார்கள்.

பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்பது உண்மைதான். இன்னும் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். சொந்த ஊரில் ஒரு வீடு கட்டித் தரக் கேட்கிறாள் என் தாய். அண்ணன் பிரபாகரன் நாடு கேட்டுப் போராடுகிறான். என் தாய் வீடு கேட்டுப் போராடுகிறாள். இதற்கு மத்தியில்தான் என் வாழ்க்கை இருக்கிறது. சராசரியாக வாழ்ந்து செத்துப் போக விரும்பவில்லை இந்தச் சீமான்.”

”அடுத்த படம்..?”

”சில வாரங்களில் ஆரம்பமாகிறது. பெயர்: சீமானின் ‘கோபம்’!” – சிரித்தபடி முடிக்கிறார் சீமான்!

நன்றி: ஆனந்த விகடன்.

Leave a Reply

Your email address will not be published.