ஈழத்தில் போரை நிறுத்தாவிட்டால் குண்டை வெடிக்கச் செய்வதாக மிரட்டியவர் கைது

கடலூர்: இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கல்லூரியை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டிய வாலிபரை கடலூர் போலீசார் கைது செய்தனர்.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக்கோரி கடலூர் பெரியார் கல்லூரி மாணவர்கள் வளாகத்துக்குள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு வந்து மாணவர்களை சந்தித்து பேசினார். பின்னர் ஈழம் மலரட்டும், மத்திய அரசே இலங்கையில் போரை நிறுத்து என்று கோஷமிட்டபடி கல்லூரியின் அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

அப்போது அங்கே இருந்த பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கல்லூரியை வெடிகுண்டு வைத்து தகர்க்க போகிறேன் என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர்கள் அவரை மடக்கிபிடிக்க முயன்றனர். அப்போது அவர், என்னை பிடிக்காதீர்கள் வெடிகுண்டு வைத்துள்ளேன் வெடித்துவிடும் என்று கையில் மஞ்சள் நிறத்தில் இருந்த ரிமோட் போன்ற கருவியை காண்பித்து பயமுறுத்தியுள்ளார்.

இதையடுத்து அலுவலகத்துக்குள் இருந்த பேராசிரியர்களும், ஊழியர்களும் ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வருவதை கண்ட வாலிபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

ஆனால் போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், கையில் வைத்திருந்தது ரேடியோ, டி.வி. போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பழுது பார்க்க பயன்படும் `மல்டி மீட்டர்’ என்றும் தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்த போலீசார், மல்டிமீட்டர் கருவியையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் டெய்லர் என்றும், கடலூருக்கு அருகே உள்ள ரெட்டிச்சாவடி கிளிஞ்சிக்குப்பத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் தினகரன் என்றும் தெரியவந்தது.

அவரை போலீஸ் விசாரணைக்காக அழைத்து சென்ற போது, இலங்கையில் தமிழ் ஈழமே எரிகிறது. என் சகோதர சகோதரிகள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களே என்னை தூக்கில் போடுங்கள். ஒருவன் தவறு செய்தான் என்பதற்காக தமிழ்இனத்தையே அழிப்பது நியாயமா. நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்றார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.