தாயகத்திற்குத் திரும்புங்கள் – தமிழர்களுக்கு அழைப்பு

மட்டக்களப்பு: சிங்கள ராணுவத்தால் அழிக்கப்பட்ட தமிழர் அடையாளங்களைக் கட்டியெழுப்பும் விடுதலைப் புலிகளின் முயற்சிக்கு ஆதரவாக, புலம் பெயர்ந்து வாழும் தமிழர் நாடு திரும்பி விடுதலைப் போரில் பங்கேற்க வேண்டும், என இலங்கையின் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒன்றியம் இன்று அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கை விவரம்:

புலம் பெயர் வாழ் தேசங்களில் உள்ள எம் இரத்த உறவுகளே. எமது உறவுடன் இணைந்த தாழ்மையான வணக்கம்.

உங்களின் தாய் மண்ணில் உங்கள் உறவுகளாகிய நாங்கள் அனுபவிக்கும் துயரங்களையும் அழிவுகளையும் இழப்புக்களையும் எங்களுக்கு மேலாக உணர்ந்து கொண்ட நீங்கள் முன்னெடுக்கின்ற தாயகத்தின் தேசிய விடுதலைக்கான எழுச்சி செயற்பாடுகள் அனைத்தையும் அவதானித்து எங்களின் இதய குமுறல்களை எப்படி உங்களோடு பகிர்ந்து கொள்வதென்று புரியாத சூழ்நிலையில் வாய்மூடி மௌனிகளாக எங்கள் இதயம் வெடிக்கின்றது.

நீங்கள் வாழும் தேசத்தில் உங்கள் உள்ளக் குமுறல்களை துணிந்து வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றீர்கள். நாங்களோ இத் தாய் மண்ணில் வாழ்ந்துகொண்டு எங்கள் தழிழ் என்ற இனிய மூச்சை சுவாசிக்க முடியாதவர்களாக தவிக்கின்றோம்.

எமது தேசிய விடுதலை போராட்டத்தின் வரலாற்றையும் தேசிய தலைவரின் வழிகாட்டல்களையும் தமிழர்களாகிய நாம் அனைவரும் உணர்வோம்.

இவ்வாறான கால கட்டத்தில் எமது வடக்கு தாயகமாகிய யாழ்மண் இணைப்பின்றி துண்டாடப்பட்டதுடன், கிழக்கு தாயகம் மட்டுநகர் மண்ணும் தேசத் துரோகிகளின் வழிகாட்டல்களுடன் எமது தாயகத்தின் தனித்துவம் தடம் புரண்டு துண்டாடப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் விடுதலை பாதையின் வன்னிக் களமானது தனிமைப்படுத்தப்பட்டு இரத்த களமாக உருமாறியுள்ளதுடன், அங்கு எமது உறவுகளின் உயிர் அழிவுகளும் அளவிட முடியாத துயரத்தில் அனைவரையும் ஆழ்த்தியுள்ளது.

எமது தேசிய தலைவரும் அவருடன் இணைந்த எமது இரத்த உறவுகள் மீதும் சிறிலங்கா அரசு தங்களால் முடியாத செயற்பாட்டை மேற்கொள்வதற்காக இந்திய அரசுடனும் ஏனைய வல்லரசு நாடுகளுடன் இணைந்து வேறோர் அயல் நாட்டை கைப்பற்றுவதுபோல எமது இனத்தையும், தேசத்தையும் அழித்து விட்டு வெற்றி விழா கொண்டாடுகின்றார்கள்.

திரும்பி வாருங்கள்…

இவ்வாறான சூழ் நிலையில் எமது தேசிய விடுதலைக்கு தளமாகவும், போர் முனையாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வன்னி போர்க்களத்தில் உள்ளவர்கள் எமது சகோதர இரத்த உறவுகள்தான். அவர்கள் மறு அவதாரங்கள் எடுப்பதற்கு கடவுளோ, மந்திரவாதிகளோ இல்லை.

அங்கு தேவைப்படுவதெல்லாம் ஆட்பலத்துடன், இணைந்த மனிதவலு தான். இவ்வலுப்பலத்தினை எமது தேசிய தலைவரின் இலக்கோடு இணைத்து கொள்வதற்கும், எம் உறவுகளை உயிர் ஊட்டுவதற்கும், புலம் பெயர்வாழ் தமிழ் மக்களாகிய நீங்கள் தேச விடுதலைக்கான அமைப்புக்கள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், இளைஞர், யுவதிகள் ஏனையோர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து சாதூரியமான திட்டங்களை மேற்கொள்வதுடன்,அழிந்து விட்ட எமது தாய் மண்ணின் சமூக, பொருளாதார, கல்வி, கலை, கலாச்சார, விழுமியங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், எமது தேசவிடுதலையை வென்றெடுப்பதற்கும் அனைவரும் விரைந்து வாரீர்! என்று அறைகூவல் விடுக்கின்றோம், என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.