சரணடைந்தால் தேங்காய் கொடுத்து வரவேற்பு – ராஜபக்சே!

கொழும்பு: கருணா கோஷ்டியினர் சரணடைந்தபோது எப்படி அவர்களை ராஜ மரியாதையுடன் வரவேற்றோமோ அதேபோல விடுதலைப் புலிகள் சரணடைந்தாலும் ராஜ மரியாதை அளித்து வரவேற்போம் என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே.

மத்திய மாகாண கவுன்சில் தேர்தலையொட்டி ரிக்கிலகஸ்தா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராஜபக்சே கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், நாம் சண்டையில் வெற்றி பெறுவோம். நாட்டைக் காப்போம்.

வடக்கை முழுமையாக மீட்போம். அங்கு அனைத்து சமுதாயத்தினரும் அமைதியுடனும், இணக்கத்துடனும் வாழ வழி செய்வோம். அதுதான் எனது முதல் கடமை.

விடுதலைப் புலிகள் சரணடைய முன்வர வேண்டும். அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இப்போது இல்லை.

அவர்கள் சரணடைய முன்வந்தால் மனிதாபிமான முறையில் அவர்கள் நடத்தப்படுவார்கள். முன்பு அவர்களுடைய சகாக்கள் (கருணா கோஷ்டி) சரணடைந்தபோது அவர்கள் ராஜ மரியாதையுடன் வரவேற்கப்பட்டனர். படையினர் அவர்களுக்கு தேங்காய்களைக் கொடுத்து வரவேற்றனர்.

அதேபோன்ற வரவேற்பை விடுதலைப் புலிகளுக்கும் வழங்க அரசும், படையும் தயாராக உள்ளது.

வன்னியில் உள்ள குழந்தைகள், பாட நூல்களுக்குப் பதில் சயனைடு குப்பிகளும், டி-56 துப்பாக்கிளையும் ஏந்திச் சென்று கொண்டிருக்கிறார்கள். இது எனக்குக் கவலை தருகிறது என்றார் ராஜபக்சே.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.