கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் சீன பிரதமர் மீது ஷூ வீச்சு

லண்டன்: லண்டன் சென்ற சீன பிரதமர் வென் ஜியாபோ மீது ஷூ வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு இறுதியில், அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் பாக்தாத் சென்றபோது அவர் மீது செய்தியாளர் ஒருவர் தனது இரு ஷூக்களையும் வீசிய சம்பவம் உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது.

இந்த சம்பவம் மறைவதற்குள் லண்டனில், சீன பிரதமர் வென் ஜியாபோ மீது ஷூ வீசப்பட்டுள்ளது.

சீன பிரதமர் வென் ஜியாபோ 3 நாள் பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

அப்போது, திடீரென எழுந்த ஒரு வாலிபர், வென் ஒரு சர்வாதிகாரி. இந்த சர்வாதிகாரிக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் எப்படி பேச அனுமதி கொடுக்கலாம் என்று ஆவேசமாக கூறியபடி தன் ஷூவை கழற்றி வீசினார்.

ஆனால் வென் ஜியாபோ மீது ஷூ படவில்லை. வென் ஜியாபோ இருந்த மேடைக்கு முன்பாகவே விழுந்து விட்டது.

உடனடியாக பாதுகாப்புப் படையினர் அந்த நபரை மடக்கிப் பிடித்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

அப்போது அங்கிருந்த சில சீன மாணவர்கள் எழுந்து, அனைவரும் ஜியாபோவுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள், வெட்கம், வெட்கம் என்று குரல் எழுப்பினர். அவர்களையும் பாதுகாப்புப் படையினர் அங்கிருந்து வெளியேற்றினர்.

பின்னர் தொடர்ந்து பேசினார் ஜியாபோ. அப்போது, இந்த சம்பவத்தால் சீனாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான உறவில் பிரச்சினை வராது என்றார்.

ஜியாபோ பேசிக் கொண்டிருந்த அரங்குக்கு வெளியேயும் 200க்கும் மேற்பட்டோர் வென் ஜியாபோவை எதிர்த்து கோஷமிட்டுப் போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.