பிரபாகரனின் சட்டையைப் பிடித்து விட்டோம்: கூறுகிறது ராணுவம்

ன்னி: பிரபாகரனின் முக்கிய மறைவிடத்தை கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அவருடைய சட்டையையும் கைப்பற்றியுள்ளதாக அது கூறியுள்ளது.

முல்லைத்தீவு பகுதியில் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ள இலங்கை ராணுவம், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மறைவிடமாக இருக்கலாம் என்று சந்தேகித்த அனைத்து பதுங்கு குழிகள், பாதாள அறைகளையும் கைப்பற்றி வருகிறது.

இந்நிலையில், பிரபாகரனின் முக்கியமான மறைவிடத்தை கைப்பற்றிவிட்டதாக ராணுவ தரப்பில் நேற்று அறிவிக்கப்பட்டது. அதுகுறித்து ராணுவ தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

“விடுதலைப்புலிகளுடன் பல மணி நேரம் நடைபெற்ற சண்டைக்குப்பின் கைப்பற்றப்பட்ட அந்த மறைவிடம், பரந்தன்-முல்லைத்தீவு மெயின் ரோட்டில் இருந்து மேற்கே 500 மீட்டர் தூரத்தில் பிரம்மந்த குலமா பகுதியில் குடியிருப்பு பகுதியின் நடுவே அமைந்துள்ளது.

பூமிக்கு அடியில் ஏறத்தாழ 50 அடி ஆழத்தில் இரண்டு அடுக்குகளாக அமைந்துள்ள அந்த பாதாள பதுங்கு கட்டிடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 4 அறைகள் உள்ளன. 3 அடி கனமான `கான்கிரீட்’ சுவரால் மிகவும் உறுதியாக அந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

தென்னந்தோப்புக்கு நடுவில்…

2 ஏக்கர் பரப்பு கொண்ட தென்னந்தோப்புக்கு நடுவில் வலுவான கோட்டைச்சுவருடன்அந்த மறைவிடம் அமைந்துள்ளது. நான்கு பக்கமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களை நிறுத்துவதற்கான பகுதியும், பல்வேறு பதுங்கு குழிகளும் அருகே காணப்பட்டன.

அந்த மறைவிட கட்டிடம், `டைல்ஸ்’ பதிக்கப்பட்டு முற்றிலும் ஏர்கண்டிஷன் வசதி செய்யப்பட்டு இருந்தது. அதன் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள ஒரு அறையில், ஆக்சிஜன் சிலிண்டரும், நவீன ரக எம்-16 இயந்திர துப்பாக்கியும் இருந்தன.

கிடைத்தது சட்டை!

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தங்கும் அறை என்று கருதப்படும் அங்கு சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் இன்சுலின் ஊசி மருந்து டப்பாக்களும், உறைபனியில் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் சாதனமும் (பிரீசர்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அந்த அறையை பாதுகாக்க, 4 மெய்க்காவலர்களுக்கான இடமும் அருகே உள்ளது. மின்சாரத்துக்காக, ஓசையின்றி செயல்படும் சக்தி வாய்ந்த 4 ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

பிரபாகரன் எப்போதும் ஸ்பென்ஸர் ரக சட்டையைத்தான் அணிவார். அந்த சட்டைகளில் ஒன்றை மட்டும் புலிகள் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பிரபாகரன் அருகில்தான் இருக்கிறார் என்று தெரிகிறது. விரைவில் அவரைப் பிடித்துவிடுவோம், என்று கூறப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.