வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட சென்ற 3 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதவாச்சியில் அனுமதி மறுப்பு

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்துள்ள மக்களையும், வவுனியா வைத்தியசாலையில் மேல்சிகிச்சை பெற்று வருகி்ன்ற வன்னிப்பகுதி நோயாளர்களையும் பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து வவுனியாவுக்குச் சென்ற 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதவாச்சி சோதனைச்சாவடியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன், அரியநேந்திரன் சந்திரநேரு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகிய டாக்டர் ஜயலத் ஜயவர்தன ஆகியோருக்கே இவ்வாறு பொலிசார் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் மன்னாருக்குச் செல்வதாக இவர்கள் மதவாச்சி சோதனைச்சாவடியில் தெரிவித்த போதிலும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி பிரயாணத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது என பொலிசார் கண்டிப்பாகத் தெரிவித்து விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய தங்களுக்கே இந்தக் கதியென்றால் சாதாரண குடிமக்களின் நிலைமை எப்படி இருக்கும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன கேள்வி எழுப்பினார்.

இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக பிரயாண அனுமதிக்காகத் தாங்கள் காத்திருந்ததாகவும், இதன்போது உரிய உயரதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விடயத்தைத் தாங்கள் கொண்டுவந்த போதிலும், பிரயாணத்தைத் தொடர்வதற்கான அனுமதியை பொலிசார் வழங்காததையடுத்து, தாங்கள் மீண்டும் கொழும்புக்குத் திரும்பியதாகவும் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.