சீனாவில் 2 கோடி கிராமப்புற இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பு

பெய்ஜிங் : எல்லா நாடுகளிலுமே கிராமத்து இளைஞர்களுக்கு அவரவர் சொந்த கிராமத்தில் வேலை கிடைப்பது இல்லை. வேலை வேண்டுமானால் அவர்கள் நகரங்களுக்குத்தான் சென்றாக வேண்டும். பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடான சீனாவிலும் இதே நிலைதான்.

அவ்வாறு சீன கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வேலைக்காக சென்றவர்கள் மீண்டும் கிராமங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம் என்னவென்றால் நகர்ப்புறங்களிலும் இப்போது வேலை இல்லாத நிலைமை. சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சி, சீனாவயும் கடுமையாக பாதித்திருக்கிறது. அங்கும் நிறைய நிறுவனங்கள் ஊழியர்களை வேலைஇழப்பு செய்து விட்டது. புதிய தொழில்களும் துவங்கப்படவில்லை. எனவே நாள்தோறும் அங்கு நிறைய பேர் வேலையை இழந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு நகரங்களில் வேலையை இழந்து, மீண்டும் கிராமப்புறங்களுக்கே திரும்பி வந்து, அங்கும் வேலை இல்லாமல் இருக்கும் கிறாமப்புற இளைஞர்கள் எண்ணிக்கை 2 கோடியை தொட்டு விட்டது என்கிறார்கள் அதிகாரிகள். கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு வேலைக்கான சென்றிருந்த சுமார் 13 கோடி மக்களில் 15.3 சதவீதத்தினர் வேலையை இழந்து மீண்டும் கிராமங்களுக்கே திரும்பியிருப்பதாக சீன கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகாரி ஜென் ஜிவன் தெரிவித்தார். இது தவிர இன்னும் 60 லட்சம் முதல் 70 லட்சம் பேர் வரை திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், அவர்களும் வந்து விட்டால் கிராமப்புறங்களில் வேலை இல்லாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை 2.5 கோடியாக <உயர்ந்து விடும் என்கிறார் ஜிவன். ஆஸ்திரேலியாவின் மொத்த ஜனத்தொகையான 2.1 கோடிக்கும் அதிகமான மக்கள் சீன கிராமப்புறங்களில் வேலை இல்லாமல் இருப்பது சீன கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. தொழில்வளர்ச்சிக்காக, கிராமப்புற விவசாய நிலங்கள் பெரும்பாலும் எடுக்கப்பட்டு விட்டதால் இப்போது வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு அங்கு என்ன வேலை கொடுப்பது என்று ஆட்சியாளர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.