மார்ச் மாதத்தில் நானோ கார்: டாடா நிறுவனம் தீவிரம்

புதுடில்லி: வரும் மார்ச் மாதத்திற்குள் டாடா நிறுவனத்தின் ஒரு லட்ச ரூபாய் ‘நானோ’ கார் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. டாடா கார் நிறுவனத்தின் ஒரு லட்ச ரூபாய் நானோ கார், உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம், சிங்கூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கார் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டது. இது குறித்து கடந்த டிசம்பரில் டாடா நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், ‘முதல் கட்டமாக குறைந்த அளவில் மட்டுமே நானோ கார் தயாரிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் பட்நாகரில் உள்ள தனது தொழிற்சாலையில் நானோ கார் தயாரிக்கும் பணியை டாடா நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. நானோ காருக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் ரானே நிறுவனத்தின் தலைவர் கணேஷ் கூறுகையில், ‘நானோ காருக்கான சீட் பெல்ட், ஸ்டியரிங் உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை எங்கள் நிறுவனம் சப்ளை செய்கிறது. உத்தரகண்டில் உள்ள தொழிற்சாலையில் ஆண்டுக்கு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையிலான எண்ணிக்கையில் கார்களை தயாரிக்கும் வகையில் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது’ என்றார். டாடா நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், ‘வரும் மார்ச் இறுதிக்குள் நானோ காரை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் இது குறித்த விரிவான தகவல் எதையும் தெரிவிக்க முடியாது’ என்றன.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.