இன அழிப்பு போருக்கு இந்தியா வழங்கி வரும் ஆதரவை உடன் விலக்கவும்: நா.உ. கஜேந்திரன் கோரிக்கை

தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போருக்கு இந்தியா வழங்கி வரும் ஆதரவை உடன் விலக்கி கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய தூதுவருக்கு நேற்று திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னியில் 45 ஆயிரம் தமிழ் மக்கள் தங்குமிடங்களோ உணவு மருந்துப் பொருட்கள் உட்பட்ட மனிதாபிமான உதவிகள் எதுவும் இல்லாத நிலையில் அனைத்தும் சிறிலங்கா அரசால் தடை செய்யப்பட்டுள்ள சாவின் விளிம்பில் வாழ்கின்றனர்.

மக்கள் பாதுகாப்பாக ஒதுங்குவதற்கென அறிவிக்கப்பட்ட பகுதிகளை இலக்கு வைத்து சிறிலங்கா அரச படைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக கடந்த ஒரு மாத காலத்தில் நூற்றுக்கும் அதிகமான சிறுவர்கள் உட்பட 800-க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,900-க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

நாளாந்தம் ஆகக்குறைந்தது 25 பொதுமக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். இன்றைய நாள் மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் மீது சிறிலங்கா இராணுவம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பல்குழல் ரொக்கெட் குண்டுகளையும், ஆட்டிலறி எறிகணைகளையும் கொத்துக்குண்டுகளையும், எரிகுண்டுகளையும் வீசி பெருமளவான பொதுமக்களை படுகொலை செய்துள்ளதுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்களை காயப்படுத்தியும் உள்ளது. மருத்துவமனைகளும் தாக்கி அழிக்கப்படுகின்றன.

மருத்துவமனைகள் அனைத்தும் இடம்பெயர்ந்து அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற நிலையில் ஓலைக்கொட்டில்களில் 9 மருத்துவர்களுடன் இயங்கி வருகின்றது. காயமடைந்தவர்களை பராமரிக்க முடியாத நிலையில் மருத்துவமனைகள் திணறுகின்றது.

வன்னியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பெருமளவான பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் நூற்றக்கணக்கானோர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டு இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.

முகாம்களுக்கு அனுப்பப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாது. அந்த மக்களை அனைத்துலக தொண்டு நிறுவனங்களோ ஊடகவியலாளர்களோ சென்று பார்வையிட முடியாது.

இவ்வாறான அவலங்கள் தொடரும் போது போரை நிறுத்தி மக்கள் கொல்லப்படுவதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும் படி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, அமெரிக்கா ஆகிய அனைத்து நாடுகளுக்கும் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டுத் தமிழ் உறவுகளும் இந்திய மத்திய அரசிடம் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசிடமும் மத்திய அரசிடமும் கோரி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய உயர் அதிகாரிகளான திரு சிவ்சங்கர் மேனன் அவர்களும் அவரைத் தொடர்ந்து திரு பிரணாப் முகர்ஐி அவர்களும் இலங்கை சென்று திரும்பியுள்ளனர்.

இவர்களின் சிறிலங்கா விஐயம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு தீவிரப்படுத்தியுள்ள இன அழிப்பு போரை தடுத்து நிறுத்தி உடனடி போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்த வழி வகுக்கும் என்று தமிழ் மக்கள் பெரிதும் நம்பினர்.

எனினும் போர்ச் சூழலில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாத நிலையில் இன அழிப்பு முன்னரை விடவும் உக்கிரமாக இடம்பெறத் தொடங்கியுள்ளது.

இதன் பின்னணியில் ஆயுதங்களையும், இராணுவ நிபுணர்களையும் வழங்கி சிறிலங்கா அரசை ஊக்கப்படுத்தி, போரை முன்னெடுக்கும் செயற்பாட்டில் இந்தியா செயற்படுவதாகவே தமிழ் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு போருக்கு இந்தியா வழங்கிவரும் ஆதரவை உடன் விலக்கி கொள்ள வேண்டும் என கோருவதுடன் உடனடி போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்தவும் உணவு மருந்து உட்பட அவசர மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகின்றேன். தமிழ் மக்களை பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.