லண்டனில் லட்சக்கணக்கான தமிழர்கள் மாபெரும் பேரணி

லண்டன்: இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையைக் கண்டித்து லண்டன் நகரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடந்தது. இதனால் லண்டனே ஸ்தம்பித்துப் போனது.

லண்டன் மில் பாங்க் எனும் இடத்தில் நேற்று பிற்பகல் 1 மணிக்கு இந்த பேரணி தொடங்கியது. ஆர்ப்பாட்டப் பேரணி நாடாளுமன்றத்தைச் சுற்றி, சென்றது.

தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்தும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தைக் கண்டித்தும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.

அத்துடன் இலங்கை அரசுக்கு எதிராகவும் அனைத்துலக சமூகத்தின் பாராமுகத்தை கண்டிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் சென்றனர்.

“சிறிலங்கா அரசே தமிழின அழிப்பை நிறுத்து”
“எங்களுக்கு தமிழீழமே வேண்டும்”
“தமிழகத்தின் உணர்வுகளை சிறிலங்கா அரசே கொச்சைப்படுத்தாதே”
“உடனடியாக போரை நிறுத்த வேண்டும்”
“ஜி.எஸ்பி. சலுகை என்பது நீண்டகால அபிவிருத்திக்கே அன்றி தமிழின இன அழிப்பிற்கு அல்ல”
“இந்திய அரசே தமிழ் மக்களின் உணர்வை மதி”
“சிறிலங்கா அரசே தமிழ் இன அழிப்பை உடன் நிறுத்து”
“ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்து”
“பி.பி.சியே தமிழ் மக்கள் அழிவை கவனத்தில் கொள்”
“பாடசாலைகளிலும் மருத்துவமனைகளிலும் கோயில்களிலும் குண்டு வீசுவதை நிறுத்து என்பது உள்ளிட்ட பல முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாரின் படம் தாங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தி வந்தனர்.

மேலும், நீதியின் திலகமாக விளங்கும் இந்தியாவின் மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த இந்திய தேசமே, சிறிலங்காவின் தென்பகுதியில் இருந்து கொண்டு தமிழின அழிப்பை மேற்கொள்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கமிட்டதுடன் அதனை பிரதிபலிக்கும் வகையில் காந்தியின் படத்தை தாங்கிய வாசக அட்டைகளையும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாங்கியிருந்தனர்.

இப்பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பல அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.

பேரணிக்கு லண்டனில் பல்வேறு பாகங்களில் இருந்தும் வருகை தரும் மக்கள் குவிந்தனர். இதனால் லண்டன் நகரமே கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது.

ஜெர்மனி இந்திய தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்

இலங்கையின் திட்டமிட்ட தமிழின அழிப்பு மற்றும் இந்தியாவின் ஆயுத உதவிக்கு கண்டனம் தெரிவித்து பெர்லின் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு தமிழர்கள் பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆயிரக்கணக்கான இதில் தமிழர்கள் கலந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

மீண்டும், இலங்கை சுதந்திர தினமான பிப்ரவரி 4ம் தேதி பெர்லினில் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தில் ஆர்ப்பாட்டம் …

இதேபோல நெதர்லாந்து வெளிவிவகாரத்துறை அமைச்சக அலுவலகம் முன்பு திடீரென்று திரண்ட தமிழர்கள் அங்கு முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Source & Thanks ; www.aol.in

Leave a Reply

Your email address will not be published.