போதைப் பொருள் வழக்கில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஒன்று விட்ட தம்பி கைது

நைரோபி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தம்பி போதை பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக கென்யாவில் கைது செய்யப்பட்டார். ஆனால் தான் கைது செய்யப்படவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தந்தை கென்யாவை சேர்ந்தவர். அமெரிக்க குடியரசு தலைவராக அவர் பதவியேற்றதை அங்குள்ள மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். அங்குள்ள அவரது பாட்டியின் வீடு நினைவு சின்னமாக மாற்றப்பட்டது. ஒபாமா அதிபராக பதவியேற்ற நாளை விடுமுறை தினமாக கென்ய அரசு அறிவித்தது.

அவரது தந்தையின் இரண்டாவது மனைவியின் மகன் ஜார்ஜ் ஹூசேன் ஒபாமா. இவர் ஒரு மெக்கானிக் ஆவார். நைரோபிக்கு அருகே உள்ள ஹருமாவில் வசித்து வருகிறார்.

நேற்று ஜார்ஜ் ஒபாமாவை கென்ய போலீஸார் சந்தேகத்தின் பேரி்ல சோதனையிட்டனர். அப்போது அவரிடம் மரிஜூவான போதைப் பொருள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதை ஜார்ஜ் மறுத்துள்ளார். இது தவறான செய்தி. நான் போதைப் பொருளை வைத்திருக்கவில்லை. என்னை போலீஸார் விசாரித்தது உண்மை. ஆனால் எந்த குற்றச்சாட்டும் சுமத்தாமல் விடுவித்து விட்டனர் என்றார்.

இதுகுறித்து உள்ளூர் போலீஸ் அதிகாரி ஜஸ்பர் ஒம்பாட்டியிடம் கேட்டபோது, எதைப் பற்றி கேட்கிறீர்கள் என்றே தெரியவில்லை என்று குழப்பமான பதிலைத் தெரிவித்து விட்டு முடித்துக் கொண்டார்.

ஜார்ஜ் ஒபாமாவுக்கு, தனது சகோதரரான பாரக் ஒபாமாவை சரிவர தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தேர்தலின்போது ஜார்ஜ் ஒபாமா குறித்த குடியரசுக் கட்சியினர் பிரச்சினை எழுப்பிப் பார்த்தனர். தனது தந்தையின் இரண்டாவது மனைவியின் குழந்தைகள் குறித்து பாரக் ஒபாமா கண்டுகொள்வதில்லை என்று கூறினர்.

ஆனால் இதை மறுத்த பாரக் ஒபாமா, அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு பிரசாரம் செய்கிறார்கள் என்று பதிலடி கொடுத்திருந்தார்.

முன்பொருமுறை கென்யாவுக்கு சென்றிருந்தபோது, சிறு குழந்தையாக இருந்த ஜார்ஜ் ஒபாமாவை தான் சந்தித்ததை “Dreams From My Father,” என்ற நூலில் பாரக் ஒபாமா விவரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.