இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான வேலை நிறுத்த அழைப்பு சட்டவிரோதம் – தமிழக அரசு

இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக எதிர்வரும் பிப்ரவரி நான்காம் நாளன்று தமிழகத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டம் சட்டவிரோதமானது என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படும் எனவும் அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

சில அரசியல் கட்சிகளும் தமிழ் ஆர்வலர் அமைப்புக்களும் ஒன்றிணைந்து அமைத்துள்ள இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்தான் முழு அடைப்பு நடத்தக்கோரி அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு அழைப்பு விடுத்த அமைப்பின் தலைவரான பழ நெடுமாறன், இலங்கையில் போர் நிறுத்தம் கோரி, காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை கடை அடைப்பென்றும், தொடர்ந்து மறுநாள். 5ஆந்தேதி, கறுப்புக் கொடி ஊர்வலம் என்றும் அறிவித்திருந்தார், ஆனால் வன்முறை எதுவும் நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் எனவும் அவர் கேட்டுக்க்கொண்டிருந்தார்.

தமிழகத்தின் பல கட்சிகள் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்திருந்தாலும், திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ் ஆகியவை சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தை புறக்கணித்தன.

இந்நிலையில் ஞாயிற்றுகிழமை வெளியாகி இருக்கும் அரசுக்குறிப்பு,
உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி முழு அடைப்பு சட்டவிரோதமென்றும், திட்டமிடப்பட்டுள்ள கடைஅடைப்பின் காரணமாக பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ, அல்லது அத்தியாவசியப் பொருட்கள் பரிமாற்றத்திற்கோ எவ்வித இடையூறும் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கிறது.

இதனிடையே, மாநிலத்திலுள்ள அனைத்து அரசு, தனியார் கல்லூரிகள் மற்றும் விடுதிகள் காலவரையின்றி மூடப்படவேண்டும் என்று சனிக்கிழமை இரவு தமிழக அரசு தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி உத்திரவிட்டுள்ளார்.

Source & Thanks : www.bbc.co.uk

Leave a Reply

Your email address will not be published.