பி.எப்., பணத்தையும் சுருட்டிய ராமலிங்க ராஜு

ஐதராபாத் : கம்பெனியின் லாபப்பணத்தை கோடிக்கணக்கில் சுருட்டியது மட்டுமின்றி, ஊழியர்களின் பி.எப்., பணத்திலும் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன மாஜி தலைவர் ராமலிங்க ராஜு தில்லுமுல்லு செய்துள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எட்டாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து, சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் ராமலிங்க ராஜு, கம்பெனி பணத்தில் மட்டுமின்றி, ஏகப்பட்ட விஷயங்களில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அரசிடம் இருந்து நிலம் வாங்கியது, விற்றது, மகனுக்காக ஆரம்பித்த மேடாஸ் நிறுவனத்தில் பணத்தை முடக்கியது போன்ற தில்லுமுல்லுகளை செய்துள்ளது ஒன்றன் பின் ஒன்றாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வரிசையில் அடுத்த தில்லுமுல்லு பி.எப்., பணத்தை சூறையாடியது தான். சத்யம் நிறுவனத்தில் 52 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர் என்று முதலில் இருந்தே கூறப்பட்டுவந்தது. ஆனால், ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் தான் உள்ளனர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைக்குப் பின் சொல்லப்பட்டது. கம்பெனி பணத்தை சூறையாடியது போல, ஊழியர்கள் எண்ணிக்கையிலும் மோசடி செய்து, அவர்களின் சம்பள பணத்தையும் தானே எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. இது மட்டுமல்ல, ஊழியர்கள் கட்டிய பி.எப்., பணத்தையும் ராமலிங்க ராஜு விழுங்கி விட்டார். சமீபத்தில், பி.எப்.,அதிகாரிகள் போலீசில் இது தொடர்பாக புகார் செய்தபோது இது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.ஐ.டி.,போலீசார் விசாரித்து வருகின்றனர்.

“சத்யம் நிறுவனத்தில் பணியாற்றுவோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 600 பேர். அவர்களின் டிசம்பர் மாதத்துக்கான பி.எப்., பணம் 15 கோடியை நிறுவனம் கட்டவில்லை. இது தொடர்பாக அனுப் பப்பட்ட நோட்டீசுக்கும் பதில் அளிக்கவில்லை’ என்று போலீசில் பி.எப்., அதிகாரிகள் புகார் மனு அளித்துள்ளனர். ஊழியர்களின் பி.எப்., பணத்தையும் ராமலிங்க ராஜு சூறையாடி விட்டதாக தெரிகிறது. கற்பனையாக ஊழியர்களின் எண்ணிக்கை உயர்த்தி, அவர்களின் சம்பளத்துடன் பி.எப்., பணத்தையும் கபளீகரம் செய்துள்ளதால் அவர் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.