சந்திரனில் விவசாயம் செய்ய வாய்ப்பு

கோவை : “”சந்திரனில் குடியேற முடியுமா, அங்கு விவசாயம் செய்து உயிர் வாழ முடியுமா என்பதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன,” என்று சந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாதுரை கூறினார். கோவை, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் சந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாதுரைக்கு பாராட்டு விழா நடந்தது.

விழாவில், விஞ்ஞானி அண்ணாதுரை பேசியதாவது: சந்திரனில் நாளை குடியிருப்பு அமைக்கும் போது பிற நாடுகளும் அதில் இணைய வேண்டும் என்பதற்காகவே, சந்திரயான் பயணத்தில் பிற நாடுகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. “நாசா’ அமைப்பு ஏழு ஆண்டுகள் சிரமப்பட்டு சாதித்த ஒரு சாதனையை நாம் நான்கு ஆண்டுகளில் சாதித்துள்ளோம். விண்கலத்தில் இதுவரை எந்த நாடும் எடுத்துச் செல்லாத 11 நவீன சாதனங்களை நாம் எடுத்துச் சென்றதால், சர்வதேச அளவில் சிறந்த திட்டம் என பாராட்டு கிடைத்துள்ளது. சந்திரயான்-1 மூலமாக சந்திரன் குறித்த விசேஷ தகவல்கள் கிடைத்துள்ளன. அமெரிக்கா, ஜப்பானை விட மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவுக்கு கூடுதல் கனிமங்கள் தேவை. சந்திரனில் உள்ள கனிம வளங்களில் ஹீலியத்தை மட்டுமே பூமிக்கு கொண்டு வர முடியும். விண்வெளி ஆய்வில் உணவு மற்றும் மருத்துவத் துறையினரின் பங்களிப்பு முக்கியம் என்பதால், இத்துறையில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்தலாம். இப்போது சந்திரனில் உயிர்கள் இல்லை. எதிர்காலத்தில் சிலரையாவது சந்திரனில் குடியேற்ற முடியுமா, விவசாயம் செய்ய முடியுமா என்பதற்கான ஆய்வுகள் நடந்து வருகிறது.

கடந்த 1960, 70ம் ஆண்டுகளில் சந்திரனில் இருந்து கொண்டு வரப்பட்ட விண்கற்களைக் கொண்டு தண்ணீர் வளம் குறித்து ஆய்வு செய்தனர்; அதன் முடிவு இப்போது தான் தெரிய வந்துள்ளது. அதேபோல் இப்போது கிடைத்துள்ள படங்கள், தகவல்களை வைத்து முடிவுக்கு வர சிறிது காலமாகும். இந்தியாவின் 20 கோடி இளைஞர்களும் ஒரே லட்சியப் பாதையில் சென்றால் பல சாதனைகள் புரியலாம். குழுவாக செயல்பட்டால் அனைத்து துறைகளிலும் இந்தியாவை மேம்படுத்த முடியும். தகுதி இருந்தால் பெண்கள் 33 சதவீத ஒதுக்கீட்டுக்காக போராடத் தேவை இல்லை. இந்திய இளைஞர்களில் 50 சதவீதத்தினர் பெண்கள் என்பதால் அனைத்து துறைகளிலும் 33 சதவீதத்தை விட அதிக ஒதுக்கீட்டை பெறலாம். நாளைய இந்தியாவை உயர்த்த நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அண்ணாதுரை பேசினார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.