நீர்மூழ்கி படகில் பிரபாகரன் தமிழகம் வழியாக வெளிநாடு செல்ல திட்டம்

ராமநாதபுரம் : இலங்கையிலிருந்து விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மன் உள்ளிட்டோர் தப்பி தமிழகத்திற்கு வந்து வெளிநாடு செல்லலாம் என ரகசிய தகவல் வந்துள்ளதை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் கியூ பிரிவு டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் தீவிர ரோந்தில் உள்ளனர்.

இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலை புலிகள் அமைப்பிற்கும் நடந்து வரும் போரில் புலிகள் அமைப்பிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முல்லை தீவு பகுதியில் உள்ள 2.5 லட்சம் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற 48 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் செய்யப்படும். பொது மக்கள் வெளியேறவில்லை எனில் புலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை இருக்கும் என இலங்கை அதிபர் ராஜபக்ஷே எச்சரித்திருந்தார். இலங்கை அரசு நிர்ணயித்த 48 மணி நேர கெடு முடிந்துவிட்டதால் எந்நேரமும் புலிகள் மேல் ராணுவம் இறுதி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன், பொட்டுஅம்மன் உட்பட சிலர் நீர்மூழ்கி படகில் தமிழகம் வழியாக வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், புலிகளின் போரை அங்குள்ள சொர்ணம் தலைமை ஏற்று நடத்த உள்ளதாகவும் ரகசிய தகவல் வந்துள்ளது. இதை தொடர்ந்து தமிழக கடலோர பகுதிகளில் கியூ பிரிவு டி.எஸ்.பி.,க்கள் ஐந்து பேர் முகாமிட்டு ஐந்து தினங்களுக்கு ஒருவர் என தலைமை வகித்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கியூ பிரிவு போலீசாருடன் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.