சிந்திய பெட்ரோலுக்கு ஆசை:111 பேர் உடல் கருகி பலி

மோலோ:டேங்கர் லாரியில் இருந்து சிந்திய பெட்ரோலை பிடிக்க பொதுமக்கள் கூடியபோது, ஏற்பட்ட தீ விபத்து, 111 பேர் உயிரைப் பறித்தது.கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து 150 கி.மீ., தொலைவில் உள்ளது மோலோ என்னுமிடம்.

இங்கு, நேற்று பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று நிலை தடுமாறி கவிழ்ந்து, லாரியில் இருந்த பெட்ரோல் சிந்தியது. சிந்திய பெட்ரோலை பிடிப்பதற்காக, அருகில் இருந்த குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் வண்டியின் அருகில் கூடினர்.அப்போது திடீரென தீ பிடித்தது. இந்த தீ விபத்தில் 111 பேர் பலியாயினர்; 200க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிக்சை பெற்று வருகின்றனர்.

“விபத்து நடந்த இடத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கருகி கிடந்ததை நான் பார்த்தேன்’ என, ரிப்ட் வேலி போலீஸ் கமிஷனர் ஹசன் நூர் தெரிவித்தார்.”உடலில் தீயுடன் அனைவரும் அலறிக்கொண்டு அருகில் இருந்த புதருக்குள் ஓடினர்’ என, நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.பெட்ரோல் சிந்திய இடத்தில் விஷமிகள் யாராவது, சிகரெட் பிடித்துவிட்டு எறிந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த வாரத்தில் தான் நைரோபி நகரில், சூப்பர் மர்க்கெட்டில் நடந்த தீ விபத்தில் 25 பேர் உடல் கருகி இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதே போல் 2006ம் ஆண்டு, கள்ளச்சந்தையில் விற்பதற்காக, காஸ் பைப் லைனில் ஓட்டை போட்டு திருடும் போது ஏற்பட்ட விபத்தில் 200 பேர் பலியாயினர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.