புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டால் மேற்கத்திய நாடுகளின் தூதர்கள், பத்திரிகையாளர்களை விரட்டியடிப்போம்: கோத்தபாய மிரட்டல்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எந்த மேற்கத்திய நாட்டின் தூதுவர்களோ அல்லது பத்திரிக்கையாளர்களோ அல்லது உதவிக் குழுக்களோ செயல்பட்டால் அவர்களை இலங்கையை விட்டே விரட்டியடிப்போம் என இலங்கை பாதுகாப்பு துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிரட்டியுள்ளார்.

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தூதர்களையும், சிஎன்என், பிபிசி, அல் ஜசீரா ஆகியவற்றை கோத்தபாய கடுமையாக மிரட்டியுள்ளார். அவர்கள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சில வெளிநாட்டு மீடியாக்கள், பாதுகாப்புப் படையினரின் பெயரைக் கெடுக்கும் வகையில் செய்திகள் வெளியிடுகின்றன. புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.

அப்படிப்பட்டவர்களை இலங்கையை விட்டே விரட்டியடிப்போம் என எச்சரிக்க விரும்புகிறேன்.

இந்த மீடியாக்கள் மக்களைப் பீதிக்குள்ளாக்கும் வகையில் செய்திகள் வெளியிடுகின்றன. புலிகள் ஆதரவு இணையதளத்தில் உள்ள வீடியோ காட்சிகளை திரும்பத் திரும்ப காட்டுகின்றன.

இன்னொரு முறை அவர்கள் இதேபோல செயல்பட்டால் அவர்களை விரட்டியடிப்போம் என்று கொக்கரித்துள்ளார் கோத்தபாய.

அப்பாவித் தமிழர்கள் பெரும் அவதியிலும், உயிர் பயத்திலும் சிக்கிக் கொண்டிருப்பது குறித்து சிஎன்என், அல் ஜசீரா உள்ளிட்ட உலக மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

பல்வேறு நாடுகளில் தமிழர்கள் ஆர்ப்பரித்துப் போராட்டங்களில் குதித்துள்ளதால் உலக நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது.

இந்த கோபத்தில்தான் கோத்தபாய இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் என நம்பப்படுகிறது.

Source & Thanks : www.newlankasri.com

Leave a Reply

Your email address will not be published.