எட்டு மணிநேர ஊர்வலத்துக்கு பின் வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் உடல் தகனம்: கல்லூரிகளை மூடும் அரசின் உத்தரவால் மாணவர்கள் போராட்டம்

ஈழத்தமிழர்களுக்காக நேற்று முன் தினம் சென்னையில் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் சென்னை கொளத்தூரில் உள்ள அவரது வீட்டில் 3மணிக்கு தொடங்கிது. 8மணி நேரத்துக்கு பிறகு இறுதிச்சடங்கு நடைபெறும் மூலக்கொத்தளத்தில் ஊர்வலம் முடிந்தது.

இந்த இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான தமிழுணர்வாளர்கள் பங்கெடுத்தனர். 3கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் பங்கெடுத்துள்ள இந்த இறுதி ஊர்வலம் நீண்டிருந்தது.

மூலக் கொத்தளம் சுடுகாட்டுக்கு கொண்டு வரப்பட்ட முத்துக்குமாருடைய உடல் அங்கே தகனம் செய்யப்பட்டது.

முத்துக்குமாரின் உடல் மாலை 3 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டது. அவரின் உடலை சட்டக்கல்லூரி மாணவர்களே தோளில் சுமந்து கொண்டு வண்டியில் ஏற்றினார்கள்.

வாகனத்தின் முன்புறம் பிரபாகரன் படமும், முத்துகுமார் படமும் வைக்கப்பட்டிருந்தது. மேலும், வாகனத்தின் இரு புறங்களிலும் முத்துக்குமார் தியாகம் குறித்த சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கட்சிக் கொடிகளை கொண்டு வரவேண்டாம் என்று மாணவர்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டனர்.

கட்சி வேறுபாடில்லாமல் வந்திருந்த அனைவரும் கறுப்புக் கொடியை ஏந்தியபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

முத்துக்குமார் உடல் செல்லும் வாகனத்தில் இயக்குநர் அமீர் அமர்ந்திருந்தார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச்சேர்ந்த வைகோ, பழ.நெடுமாறன், திருமாவளவன் உட்பட அரசியல் தலைவர்களும் பாரதிராஜா,மணிரத்னம்,சேரன்,சீமான், செல்வமணி,மன்சூர் அலிகான் உட்பட திரைப்பட உலகினரும் தமிழுணர்வாளர்களும் இலங்கைக்கு துணைபோகும் மத்திய அரசை கண்டித்து ஆவேசமாக கோஷமிட்டபடியே இறுதி ஊர்வலத்தில் சென்றனர்.

முத்துக்குமார் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் உருவம் பதித்த துணி போர்த்தப்படிருந்தது.

பாதி ஊர்வலத்தில் அந்த பிரபாகரன் துணியை எடுத்துவிட்டனர்.

ஒடுக்கப்பட்டோருக்கான அமைப்பினர், இந்த ஊர்வலத்தின் போது இந்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி இந்திய தேசியக்கொடியை எரித்தனர்.

முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தின் வழிநெடுகிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடையடைப்பு மூலமாக வணிகர்கள் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஊர்வலத்தின் வழிநெடுகிலும் பொதுமக்கள் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைத்து ஊர்வலத்தில் பங்கெடுத்துள்ள தமிழுணர்வாளர்களுக்கு தாகம் தீர்த்தனர். பெரம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஊர்வலம் போன போது பொதுமக்கள் முத்துக்குமாரின் உடல் செல்லும் வாகனத்துக்கு தீப ஒளி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

சென்னை மாநகரரில் இந்த இறுதி ஊர்வலம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

ஆறு மணி நேரத்துக்கு பின் இறுதிச்சடங்கு நடைபெரும் மயானத்துக்குள் முத்துக்குமார் உடல் எடுத்துச்செல்லப்படும் முன், தமிழகம் முழுவதும் கல்லூரிகளை மூட அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்தது.

இலங்கை பிரச்சனை தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்தது என்பதால் மாணவர்கள் கொதித்தெழுந்தனர்.

சட்டக்கல்லூரி மாணவர்கள், அரசு மேலும் மேலும் எங்களை கோபப்பட வைக்கிறது. எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவேயில்லை என்று ஆவேசப்பட்டு முத்துக்குமார் உடலை தகனம் செய்யவிடாமல் இரண்டு மணி நேரம் முத்துக்குமார் உடல் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு வனிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உட்பட பலரின் சமாதானத்துக்கு பிறகு மாணவர்கள் முத்துக்குமார் உடலை தகனம் செய்ய ஒப்புக்கொண்டனர்.

அதன் பிறகு முத்துக்குமாரின் உடல் மயான இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Source & Thanks : /www.newlankasri.com

Leave a Reply

Your email address will not be published.