இலங்கை தமிழர் மீது தாக்குதலை நிறுத்தக்கோரி திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் 4 ஆவது நாட்களாக உண்ணாநிலை போராட்டம்

இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெறும் தாக்குதலை தடுத்து நிறுத்த கோரி திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று 4 ஆவது நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சோர்வடைந்த மாணவர்களிடம் மருத்துவர்கள் வலியுறுத்தியும் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தினை கைவிட மறுத்துவிட்டனர்.


இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனே தடுத்து நிறுத்தவேண்டும், சிங்கள இராணுவத்துக்கு இந்திய அரசு உதவிகள் செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் 27 பேர் கடந்த வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினர்.

சட்டக்கல்லூரி முன்பு பந்தல் அமைத்து அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.

நேற்று 4 ஆவது நாட்களாக அவர்களின் உண்ணாநிலைப் போராட்டம் நீடித்தது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் உண்ணாநிலை இருக்கும் மாணவர்களுடன் உரையாடுகின்றார்

உண்ணாநிலை இருந்தவர்களில் சதீஷ், சதீஷ்குமார், தமிழரசன் ஆகிய 3 மாணவர்கள் நேற்று முன்நாள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை உண்ணாநிலை இருப்பவர்களில் மேலும் 12 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் உண்ணாநிலை பந்தலிலேயே சோர்ந்து போய் படுத்து கிடந்தனர். இது தொடர்பான தகவலை காவல்துறையினர் அரச மருத்துவர்களுக்கு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் உண்ணாநிலை பந்தலுக்கு வந்து 12 மாணவர்களின் உடல்நிலையையும் பரிசோதித்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

இதையொட்டி சட்டக் கல்லூரி முதல்வர் இசைமதி, திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சின்னச்சாமி ஆகியோர் அங்கு வந்து உண்ணாநிலை போராட்டத்தினை கைவிடும்படி மாணவர்களிடம் கேட்டனர்.

ஆனால், மாணவர்களோ நாங்கள் உயிரை விட்டாலும் இங்கேயே தான் விடுவோமே தவிர உண்ணாநிலையினை கைவிடமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி விட்டனர்.

உடல் நிலை கருதி மயக்கம் அடைந்த மாணவர்களாவது சிகிச்சைக்கு செல்லும்படி கேட்டும் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவர்கள் தாங்கள் கொண்ட கொள்கையில் பிடிவாதமாக இருந்ததால் காவல்துறையினரும் அவர்களுடன் பேசுவதை கைவிட்டு சென்றனர்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.