பொது வேலை நிறுத்தம் சட்டவிரோதமானதல்ல: கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் பதில்

பொது வேலை நிறுத்தம் சட்டவிரோதமானதல்ல என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதிக்கு இலங்க தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் பதிலளித்துள்ளார்.

இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்ய‌க்கோ‌ரி இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌ம் சா‌ர்‌பி‌ல் எதிர்வரும் புதன்கிழமை (04.02.09) நடத்தப்படவுள்ள முழு அடை‌ப்பு‌ப் போரா‌ட்ட‌ம் ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் புற‌ம்பானது எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதற்கு பதிலளித்து பழ.நெடுமாறன் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு அப்பாவித் தமிழர்களின் உயிர்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெப்ரவரி 4 ஆம் நாள் அன்று பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்திருப்பது சட்ட விரோதமானது என தமிழக அரசு தவறான பிரச்சாரம் செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உச்சநீதிமன்றம் முழு அடைப்பு செய்வதற்கு எதிராகக் கூறியுள்ள கருத்தினைத் திரித்துக்கூறி மக்களை மிரட்டுவதற்கு தமிழக அரசு முயல்கிறது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகுதான் மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் சுயவேலை மறுப்புப் போராட்டங்களும் கடையடைப்புப் போராட்டங்களும் நடத்திருக்கின்றன என்பதனை தமிழக அரசின் கவனத்திற்குச் சுட்டி காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், திரைப்படத்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களும் பெப்ரவரி 4 ஆம் நாள் அன்று தங்களுக்குத் தாங்களே சுயவேலை மறுப்புச் செய்து தங்கள் இல்லங்களிலேயே இருக்குமாறு மிக்க பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

பொது வேலை நிறுத்தத்தை முறியடிக்க தமிழக அரசு தவறான பிரச்சாரத்திலும், மிரட்டல் நடவடிக்கையிலும் ஈடுபட்டு இருப்பது அப்பட்டமான ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்துத் தமிழர்களும் பொது வேலை நிறுத்தம் வெற்றிபெற துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

போராட்டங்களின் போது எந்த இடத்திலும் சிறு அளவு வன்முறை ஏற்படாமலும், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் இல்லாமலும் கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.

பொது வேலைநிறுத்தம், கறுப்புக்கொடி ஊர்வலம் ஆகியவற்றை நடத்துவது குறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள், மற்றும் அமைப்புக்களின் மாவட்ட பொறுப்பாளர்கள் அவசரமாகக்கூடித் திட்டங்கள் வகுத்துச் செயற்படுமாறு வேண்டிக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.