சர்வதேச பொருளாதார நெருக்கடி எதிரொலி பெங்களூரில் வீட்டு வாடகை கடும் சரிவு

பெங்களூரு:சர்வதேச பொருளாதார நெருக்கடியை அடுத்து, பெங்களூரில் வீட்டு வாடகை பெரிதும் குறைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 30 சதவீதம் அளவுக்கு வாடகை குறைந்துள்ளது.சர்வதேச பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் பெங்களூரு, ஐதராபாத் போன்ற இடங்களில் செயல்படும் சாப்ட்வேர் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


இதையடுத்து,அந்நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளன. ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற அதிரடி நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், மற்ற நிறுவனங்களும் இதே போன்ற சிக்கலை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக, பெங்களூரில்வீட்டுவாடகை பெரிதும் குறைந்துள்ளது.

தாராளமாக சம்பளம் கிடைத்தபோது மாதம் பத்தாயிரம் ரூபாயை வீட்டு வாடகையாக கொடுத்த பலர், தற்போது சம்பளம் குறைந்துள்ளதாலும், வேலையை இழந்துள்ளதாலும் வீடுகளை காலி செய்துள்ளனர். குறைந்த வாடகைக்கு வீடுகளை தேடி வருகின்றனர். இதனால், பல பெரிய வீடுகள் காலியாக உள்ளன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் வீட்டு வாடகை 30 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு, இந்திரா நகர் பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன், இரண்டு படுக்கை அறைகளை உடைய வீட்டுக்கு மாதம் 12 ஆயிரம் ரூபாய்க்கு வாடகை வசூலிக்கப் பட்டது. தற்போது அந்த வீட்டின் வாடகை ரூ.12 ஆயிரமாக குறைந்துள்ளது. வைட்பீல்டு பகுதியில் சில மாதங்களுக்கு முன் 25 ஆயிரத்துக்கு வாடகை விடப்பட்ட வீடுகள், தற்போது காலியாக கிடக்கின்றன. வாடகை 12 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டும், அங்கு குடி வருவதற்கு யாரும் விரும்பவில்லை.பெங்களூரு நகரின் அனைத்து பகுதிகளிலும் இதே நிலை நீடிப்பதாக ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.