அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி: 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

ஈழத்தில் அப்பாவி தமிழர்கள் சிங்களப் படைகளால் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டு வருவதை கண்டித்தும் அனைத்துலக சமூகம் தனது மௌனத்தை கலைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நேற்று மாபெரும் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான போராட்டங்களின் ஒரு அங்கமாக மெல்பேர்ணில் நேற்று நடைபெற்ற இப்பேரணியில் முன்னர் எப்போதும் காணாத அளவுக்கு பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட இக்கவனயீர்ப்பு பேரணி மெல்பேர்ண் நகரை பொறுத்தவரை நேற்று மிக முக்கியமானதாக கருதப்பட்டது.

பல வருடங்களுக்கு பின்னர் 45 பாகை செல்சியஸ் வெப்பநிலை சுமார் நான்கு நாட்களுக்கு மேல் நீடிக்கும் கொதிகால நிலையில் மெல்பேர்ண் நகரமே எரிந்து கொண்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்றைய கவனயீர்ப்பு பேரணி கடும் வெப்பநிலையில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்று முடிந்திருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.

அவுஸ்திரேலிய இளையோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 நிமிடமளவில் மெல்பேர்ண் நகரின் மத்தியில் அமைந்துள்ள திறைசேரி பூங்காவில் இருந்து தொடங்கியது.

அங்கிருந்து விக்டோறிய மாநில நாடாளுமன்ற கட்டத்தின் முன்பாக சென்றடைந்த பின்னர், பிரதான நிகழ்வுகள் நடைபெற்றன.

தமிழ் இன உணர்வாளர்கள் மற்றும் பலர் அங்கு உரையாற்றிய பின்னர் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் வருகை தந்து உரையாற்றினார்.

இந்த வெப்ப நாளினை பொருட்படுத்தாது தமது இனத்துக்காக ஒன்று திரண்டு குரல் எழுப்பும் மக்களின் போராட்டத்துக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். சிறுபான்மை இனம் ஒன்று தொடர்ச்சியான அடக்குமுறைக்கு முகம்கொடுப்பது கவலை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

அவரது பேச்சின் நிறைவின் பின்னர், அவுஸ்திரேலிய அரசுக்கான மனு ஒன்று தமிழ் இளையோர் அமைப்பினால் அவரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஈழத் தமிழர்களின் விடிவுக்காக தீக்குளித்து தன்னுயிரை தியாகம் செய்த “வீரத் தமிழ் மகன்” முத்துக்குமாருக்கு வணக்கம் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற கட்டடத்துக்க முன்பாக நிகழ்வுகளை நிறைவு செய்துகொண்டு, கவனயீர்ப்பு பேரணி தனது பயணத்தை தொடங்கியது.

மெல்பேர்ண் நகரின் முக்கிய – சனநடமாட்டம் மிகுந்த – வீதிகளான பேர்க் வீதி மற்றும் சுவான்ஸ்டன் வீதி ஆகியவற்றின் ஊடாக நகர்ந்த பேரணி, பிலின்டர்ஸ் வீதியை கடந்து அலெக்சாண்டர் பூங்காவில் முடிவடைந்தது.

பேரணி நடை பாதையோரம் மாத்திரமே நகரலாம் என்று அனுமதியளித்திருந்த அவுஸ்திரேலிய காவல்துறை, பெருந்திரளாக கூடிய மக்கள் வசதியாக நடந்து செல்வதற்கு ஏதவாக, ஒரு கட்டத்தின் பிறகு வீதியில் நடந்து செல்வதற்கு அனுமதியளித்திருந்தனர்.

மிகவும் கொதிநிலை நிலவிய இன்றைய நாளில் இவ்வாறான போராட்டம் நடைபெறுவதை பார்த்து திகைத்த பல்லின மக்களும் வழி நெடுக நின்று பேரணியின் நோக்கம் என்ன என்பது குறித்து விசாரித்து அறிந்து கொண்டதுடன் படங்களும் எடுத்துக்கொண்டனர்.

நகரின் மத்திய பகுதியை கடக்கும்போது, சிறிலங்கா அரசே கொலைகளை நிறுத்து, தமிழ் மக்களை கொல்வதை நிறுத்து போன்ற முழக்கங்களை பேரணியில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.

பேரணி நகர்வதற்கு மிகவும் உதவியாகவும் உறுதுணையாகவும் விக்டோறிய மாநில காவல்துறை பணியாற்றிய அதேவேளை, பேரணியில் கலந்து கொண்டவர்களின் தாகம் தீர்ப்பதற்கு அவுஸ்திரேலிய தமிழ் அமைப்புக்கள் தொடர்ச்சியாக நீராகாரம் வழங்கிய வண்ணம் இருந்தனர்.

பேரணியில் கலந்து ஒரு சிலர் மயக்கமுற்று வீழ்ந்தனர். அவர்களுக்குரிய முதலுதவிகளை – ஏற்கனவே திட்டமிட்ட படி – இளையோர் அமைப்பினர் வழங்கினர்.

அலக்சாண்டர் பூங்காவை பேரணி சென்றடைந்த பின்னர், அங்கு பேச்சுக்கள் இடம்பெற்றன.

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இன்றைய வரலாற்று காலகட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து கூறப்பட்டது. தமிழ் மக்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டது.

பிற்பகல் 5:00 மணியளவில் பேரணி நிறைவு பெற்றது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.