முத்துக்குமார் உடலை அடக்கம் செய்வதை எதிர்த்து மாணவர்கள் போர்க்கொடி

சென்னை: முத்துக்குமாரின் குறிக்கோள் நிறைவேறும்வரை அவரது உடலை அடக்கம் செய்ய விட மாட்டோம் என மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இன்று காலை 10 மணிக்கு முத்துக்குமாரின் உடல் அடக்கம் செய்யப்படுவதாய் இருந்தது. ஆனால் தமிழகமெங்கிலும் இருந்து மருத்துவ,சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்கள் வந்து முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதால் இன்று மாலை உடல் அடக்கம் செய்யலாம் என்று முடிவெடுத்தனர் அரசியல்வாதிகள்.

முத்துக்குமார் தனது கடைசிக்கடிதத்தில், ‘என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும்,முத்துக்குமார் உடல் அடக்கம் செய்வதை பொறுத்தவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அரசியல்வாதிகள் தலையிடாதீர்கள் என்று சொல்லி வருகின்றனர்.

இதனால் முத்துக்குமாரின் உடல் அடக்கம் வரும் ஞாயிற்றுக்கிழமைதான் நடக்கும் என்று தெரிகிறது.

தங்கர்பச்சான் ஆவேசம்!

இந்நிலையில், திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர்பச்சான், முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுதச்த வந்தார். அப்போது மாணவர்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு ஆதரவாகப் பேசினார்.

நான் இத்தனை காலம் திரைத்துறையில் இருந்தும் முத்துக்குமார் எடுத்த முடிவு போல் எடுக்க நினைக்கவில்லை. இதற்காக நான் வெட்கப்படுகிறேன். ‘என் பிரேதத்தை துருப்பு சீட்டாக வைத்துக்கொண்டு போராடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் முத்துக்குமார்.

இந்த ஒரு வாசகம் போதும். வாருங்கள் இளைஞர்களே போராடுவோம். இளைஞர்களால் தான் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு தர முடியும்” என்றார் அவர் ஆவேசமாக.

தமிழ் சினிமா பிரபலங்களான நடிகர் சத்யராஜ், இயக்குநர் சேரன் ஆகியோரும் வந்து முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

அப்போது சேரன், ‘முத்துக்குமார் தனது கடைசிக் கடிதத்தில்..’ என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுகள் என்று சொல்லியிருக்கிறார். அதனால் சீக்கிரத்தில் உடலை அடக்கம் செய்யக் கூடாது. இலங்கை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை முத்துக்குமாரின் உடலை அடக்கம் செய்ய சம்மதிக்கக்கூடாது.

அப்போதுதான் முத்துக்குமாரின் ஆத்மா சாந்தியடையும்” என்றார்.

உடல் அடக்கத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

Source & Thanks : /thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.