3 ரா ஏஜென்டுகளைப் பிடித்துள்ளோம் – கூறுகிறது பாக்.

லாகூர்: இந்திய உளவு அமைப்பான ரா அமைப்பைச் சேர்ந்த 3 ஏஜென்டுகளை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

இவர்கள் லாகூரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அது கூறியுள்ளது.

இதுகுறித்து லாகூர் தலைமை போலீஸ் அதிகாரி பரவேஸ் ரத்தோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பர்கி, முன்டியன்வாலாவைச் சேர்ந்த முகம்மது பயஸ் என்கிற பெஜா, மெளஸா லூதரைச் சேர்ந்த முகம்மது அக்ரம் என்கிற மியான் அக்ரம் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஷாஷாத் பட்டி ஆகியோரை கைது செய்துள்ளோம்.

இவர்கள் முக்கிய இடங்கள் குறித்த தகவல்கள், புகைப்படங்களை ராவுக்கு அளித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து பெருமளவிலான ஆயுதங்கள், வெடிபொருட்கள், ரிமோட் கன்ட்ரோல் குண்டுகள், முக்கிய ஆவணங்கள், வரைபடங்கள், மேப்புகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.

எல்லை தாண்டி இந்தியாவுக்கு 7 முறை சென்றுள்ளதாகவும், அங்கு டெல்லி மற்றும் அமிர்தசரஸில் உள்ள ரா அதிகாரிகளிடம் பயிற்சி பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் பல பகுதிகளில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டியிருந்ததாகவும் ஒத்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக லாகூரை சீர்குலைக்கும் திட்டத்துடன் இருந்தனர்.

லாகூர் செளபர்ஜி, மோச்சி கேட் பகுதிகளில் குண்டு வைக்கவும், பைசலாபாத்தில் உள்ள ஜாமியா மசூதி, மிலத் செளக் ஆகிய பகுதிகளிலும், முரித்கே, மான்ஷெரா, சிசவாட்னி ஆகிய இடங்களில் நாச வேலைகளை நிகழ்த்தவும் திட்டமிட்டிருந்தனர்.

இவர்களுக்கு 2006ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி பெரோஸ்பூர் சாலையில் நடந்த குண்டு வெடிப்பு உள்ளிட்ட முந்தைய குண்டு வெடிப்புச் சம்பவங்களிலும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது என்றார் அவர்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.