தமிழ்நாடு ஹீரோ வாங்க’ என அழைத்த சோனியா: திண்டுக்கல் சிறுவன் பெருமிதம்

திண்டுக்கல்: “தமிழ்நாடு ஹீரோ வாங்க’ என தன்னை காங்.,தலைவர் சோனியா அழைத்தது பெருமையாக இருந்தது என வீர தீர செயலுக்காக டில்லி குடியரசு தின விழாவில் விருது பெற்ற தமிழக சிறுவன் மருதுபாண்டி தெரிவித்தார். திண்டுக்கல் தோமையார்புரம் கிழக்கு காலனியை சேர்ந்த முருகேசன் மகன் மருதுபாண்டியன். 8ம் வகுப்பு மாணவரான இவர், கடந்த ஆண்டு ஜூன் 26 அன்று காலை தனது ஒன்றரை வயது தங்கை ரேவதிக்கு ரயில் செல்வதை வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார்.

காலை 7.45 மணியவில் மதுரையிலிருந்து சென்ற வைகை எக்ஸ்பிரஸ், மருதுபாண்டி வீடு இருந்த பகுதியை கடந்து சென்றது. கடைசி பெட்டி சென்றவுடன் 3 அடி நீளத்திற்கு தண்டவாளம் பெயர்ந்து தூக்கி வீசப்பட்டது. அருகில் உள்ள ரயில்வே கேட்டிற்கு சென்று தகவல் கூறி விட்டு சிறுவன் திரும்பிய போது திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட மருதுபாண்டி தனது தங்கையின் சிவப்பு கவுனை கொடிபோல் காட்டி ரயிலை நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தை தவிர்க்க உதவிய சிறுவன் மருதுபாண்டி அகில இந்திய அளவில் வழங்கப்படும் வீர தீர செயலுக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விருதை பெற, ஜன., 16 ல் டில்லிக்கு பெற்றோர் மற்றும் தங்கையுடன் சென்றார்.டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய அமைச்சர்கள் அந்தோணி,ரேணுகா சவுத்திரி,டில்லி கவர்னர் ஆகியோர் இவர்களை பாராட்டி பரிசு வழங்கி விருந்தளித்துள்ளனர் .காங்., தலைவர் சோனியாவை சந்தித்த போது,”தமிழ்நாடு ஹீரோ வாங்க’ என்று தமிழிலேயே மருதுபாண்டியை அழைத்துள்ளார்.தொடர்ந்து துணை ஜனாதிபதி அன்சாரி பதக்கம் மற்றும் சான்றிதழை அளித்துள்ளார். விருது பெற்ற பின் ஜனாதிபதி பிரதீபாபாட்டிலை சந்தித்து சிறுவர்கள் அனைவரும் வாழ்த்துபெற்றுள்ளனர்.குடியரசு தின விழா அணிவகுப்பை காண விருது பெற்ற சிறுவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

டில்லி அனுபவம் குறித்து மருதுபாண்டி கூறியதாவது: காங்., தலைவர் சோனியா என்னை “தமிழ்நாடு ஹீரோ வாங்க’ என்று அழைத்தது பெருமையாக இருந்தது. பல தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி. தமிழகத்தில் இருந்து சென்ற ஆண்டு யாரும் இந்த விருதுக்கு தேர்வாகவில்லை என தெரிவித்தனர். குளிர் கடுமையாக இருந்தது. ரயில்வே அமைச்சர் லல்லுபிரசாத்தை சந்திக்காதது தான் வருத்தம். சிறுவயதிலேயே பொதுநலத்தோடு செயல்பட்டால் எனக்கு கிடைத்தது போல் அங்கீகாரம் அனைவருக்கும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.