அமெரிக்காவின் அதிக பணத்தாசை : தாவோசில் சீனா, ரஷ்யா கண்டனம்

தாவோஸ்: கடந்த 78 ஆண்டுகளாக சில உலக நாடுகள் பின்பற்றி வரும் குறைந்த சேமிப்பு மற்றும் அதிக நுகர்வே, உலக பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என சீனா குற்றம் சாட்டியது.


மேலும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒபாமா நிர்வாகம், சீனாவுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோசில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் பேசிய சீனப் பிரதமர் வென் ஜியாபோ கூறியதாவது: நிதி நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தில் அதிக லாபம் பெறுவதையே கருத்தில் கொண்டு, கண் மூடித்தனமாக அளவுக்கதிகமாக விரிவாக்கம் செய்ததே உலகப் பொருளாதாரத்தைச் சேதப்படுத்தியது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, அமெரிக்காவில் ஒபாமா தலைமையில் அமைந்திருக்கும் புதிய நிர்வாகம், சீனாவுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயலாற்ற வேண்டும். நிதி நிறுவனங்களின் சுய கட்டுப்பாட்டின்மை, அதை மதிப்பீடு செய்யும் நிறுவனங்களின் தவறான அணுகுமுறையே, உலகப் பொருளாதாரத்தில் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பால் இந்தாண்டு, 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்தாண்டை விட இது 1 சதவீதம் குறைவு. இவ்வாறு வென் ஜியாபோ கூறினார்.

இம்மாநாட்டில் பேசிய ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் கூறுகையில், “கடந்தாண்டு இம்மாநாட்டில் பேசிய அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலிசா ரைஸ், அமெரிக்க பொருளாதாரம் பாதுகாப்பான நிலையில் இருப்பதாகப் பேசினார். தற்போது, முதலீட்டு வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் அவர்கள் பெற்ற லாபத்தை விட, இந்த 12 மாதங்களில் அவர்கள் அதிக நஷ்டமடைந்து விட்டனர். இது, தற்போதைய உண்மை நிலையைக் காட்டுகிறது. தற்போது இருக்கும் நிதி அமைப்புகள் தோல்வியடைந்து விட்டன’ என்றார். இம்மாநாட்டில் பேசிய சீனப் பிரதமர் வென் ஜியாபோ மற்றும் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் இருவரும், சர்வதேச விவகாரங்களில் அமெரிக்க புதிய அதிபர் ஒபாமா மிகப் பெரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனக் கோரினர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.