இலங்கையில் 48 மணி நேரப் போர்நிறுத்தம்: சிறிலங்க அரசு அறிவிப்பு

முல்லைத் தீவில் சிக்கியுள்ள தமிழர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்ல ஏதுவாக 48 மணி நேரம் அவகாசம் தருவதாக சிறிலங்க அரசு அறிவித்துள்ளது. இந்த காலத்தில் அப்பகுதி மக்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தப்படாது என அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள்- சிறிலங்க ராணுவம் இடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் கடும் சண்டை நடந்து வருகிறது. புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களையெல்லாம் ராணுவம் ஒன்றன்பின் ஒன்றாகக் கைப்பற்றித் தங்கள் வசத்தில் எடுத்துக்கொண்டுவிட்டதாகக் கூறி வருகிறது.

ஆனால் அதேவேளையில் போர்ப் பகுதியில் சிக்கித் தவிக்கும் அப்பாவி மக்கள் மீது, புலிகளை தாக்கும் போர்வையில் தொடர் எறிகணைத் தாக்குதல், பீரங்கித் தாக்குதலில் சிறிலங்க ராணுவ ஈடுபட்டு வருகிறது. அப்பாவி மக்கள் தங்குவதற்காக அந்நாட்டு அரசு அறிவித்த மக்கள் பாதுகாப்பு வலயங்களின் மீதும் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் நூற்றுக்கணக்கானோர் தினமும் உயிரிழந்து வருகின்றனர்.

இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடையே மிகுந்த கவலையும் மன வேதனையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு கொழும்பில் இருந்து வெளியான செய்தியில், முல்லைத் தீவில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல சிறிலங்க அரசின் சார்பில் 48 மணி நேரம் அவகாசம் தரப்பட்டிருப்பதாகவும், அந்நேரத்தில் போர்ப்பகுதியில் இருந்து வெளியேறுபவர்கள் மீது படையினர் தாக்குதல் எதையும் நடத்தமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamil.webdunia.com

Leave a Reply

Your email address will not be published.