கொழும்பில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் திடீர் கைது

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இரகசிய காவல்துறையினர் வீதிகளில் நடத்திய விசாரணைகள், சோதனை நடவடிக்ககைகளில் பல தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு வாரத்தில் மட்டும் 10 பெண்கள் உட்பட 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கைதானவர்களின் உறவினர்கள் தம்மிடம் முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும் மனித உரிமை சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

சிவில் உடைகளில் நின்று வீதி ஓரங்களில் கடமையில் ஈடுபடும் இரகசிய காவல்துறையினர் நடந்து செல்லும் இளைஞர், பெண்களை வழிமறித்து விசாரணை செய்கின்றனர்.

அத்துடன், பயணிகள் பேருந்துகளில் பயணிகள் போன்று பயணம் செய்யும் இரகசிய காவல்துறையினர் இளைஞர், பெண்களிடம் அடையாள அட்டைகளை பரிசோதிக்கின்றனர்.

அவ்வாறான விசாரணைகள், சோதனை நடவடிக்கைகளின் போது சிலரை மேலதிக விசாரணைக்காக அழைத்து செல்வதாகவும் ஆனால் அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்படுகின்றனர் என்பது குறித்து உறவினர்களுக்கு அறிவிப்பதில்லை என்றும் முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இரகசிய காவல்துறையினரால் தமிழ் இளைஞர்கள், பெண்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் அநேகமானவர்கள் தொழில் நிமித்தம் அல்லது வெளிநாடு செல்வதற்காக யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பிரதேசங்களில் இருந்து கொழும்புக்கு வந்தவர்கள் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Source & Thanks ; puthinam.com

Leave a Reply

Your email address will not be published.