செங்கல்பட்டு மாணவர்களின் உண்ணாநிலை போராட்டம் முடிவுக்கு வந்தது; சட்டக்கல்லூரியில் இருந்து மாணவர்கள் இடைநிறுத்தம்

இலங்கை தமிழர்களுக்காக செங்கல்பட்டு அரசினர் சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த ஏழு நாட்களாக நடத்திய உண்ணாநிலை போராட்டம் நேற்று புதன்கிழமை முடிவுக்கு வந்தது. இவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பழச்சாறினை கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தினை முடித்து வைத்தார்.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக்கோரியும், போர் நிறுத்தம் செய்யக்கோரியும், செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்களான கெம்புகுமார், திருமுருகன், விஜயகுமார், முஜிபுர் ரகுமான், நவீன், சுரேஷ், ராஜா, ஆறுமுக நயினார், முனிஷ்குமார், மணிவேல், பிரபு என்ற அன்பு, பிரவீன், ராஜ் குமார், துரியன் உள்ளிட்ட 14 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கினர்.

இதில் கெம்பு குமார், திருமுருகன், துரியன், ஆறுமுக நயினார், நவீன், முனிஷ்குமார் ஆகிய ஆறு மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசாங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஏழாவது நாளாக நேற்று எட்டு மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடர்ந்தனர்.

அதிகாலை 5:00 மணியளவில், அந்த மாணவர்களின் நாடித்துடிப்பு குறைந்து வருவதாக மருத்துவர்கள் கூறியதன் பேரில், உண்ணாநிலை பந்தலுக்கு காவல்துறையினர் சென்றனர். அவர்கள், எட்டு மாணவர்களையும் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று, செங்கல்பட்டு அரச மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.

மருத்துவமனையிலும் மாணவர்கள், உண்ணாநிலைப் போராட்டத்தினை நிறுத்தவில்லை. இந்த நிலையில் மருத்துவமனைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மாலையில் சென்றார். அங்கு மாணவர்களுடன் அவர் பேச்சு நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, உண்ணாநிலைப் போராட்டத்தினை நிறுத்திக்கொள்ள மாணவர்கள் சம்மதித்தனர். அதன் பின் மாணவர்களுக்கு பழச்சாறு கொடுத்து, உண்ணாநிலைப் போராட்டத்தினை, திருமாவளவன் முடித்து வைத்தார். அப்போது பாரதீய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் குமரவேல், கவிஞர் காசி ஆனந்தன், பேராசிரியர் சுப. வீர பாண்டியன், இயக்குனர் புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

ஊடகவியலாளர்களிடம் திருமாவளவன் தெரிவித்ததாவது:

பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணம் எதிர்பார்த்தது போல் இல்லை. அவர் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன், போர் நிறுத்தம் பற்றி பேச வில்லை. மாறாக, இந்தியாவில் இருந்து அனுப்பிய நிவாரண பொருட்கள் கிடைத்ததா? என்றுதான் கேட்டு இருக்கிறார்.

அனைத்து கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி, விரைவில் அடுத்த கட்ட போராட்டம் நடத்துவோம்.

இலங்கை தமிழர்களுக்காக, தமிழகம் முழுவதும், மாணவர் சமுதாயம் அறப்போரில் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.

முன்னதாக இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர், மாணவர்களை ஆஸ்பத்திரியில் பார்த்து வாழ்த்து தெரிவித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட துணை தலைவர் சகாய ராஜ் மற்றும் பலரும் வாழ்த்தினார்கள்.

இதேவேளை, உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்ட 14 மாணவர்களையும் சட்டக்கல்லூரி நிர்வாகம் 15 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்துள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.