சென்னை மெட்ரோ ரயில்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சென்னை:சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு நேற்று கூடியது. இதில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இத்திட்டம், சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து தேவைகளுக்கு ஒரு நீண்டகாலத் தீர்வாக அமையும்.


சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த, தமிழக அமைச்சரவை ஜூன் 2006ல் முடிவெடுத்தது. இத்திட்டம் குறித்து விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க அரசு ஆணையிட்டதைத் தொடர்ந்து<, இப்பணி டில்லி மெட்ரோ ரயில் கழகத்திடம் அளிக்கப்பட்டது.திட்ட அறிக்கை 2007 நவம்பர் முதல் தேதி சமர்ப்பிக்கப்பட்டு, அதே மாதம் 7ம் தேதி தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றது. இத்திட்டத்துக்கான மதிப்பீடு 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய். திட்டச் செலவில் 59 சதவீதம் ஜப்பான் அரசின் சலுகையிலான, அரசு சார் மேம்பாட்டு நிதி உதவி கடன் மூலம் மேற்கொள்ளப்படும்.

கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம், மத்திய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி டோக்கியோவில் கையெழுத்தானது. மத்திய அரசு, திட்டச் செலவில் 15 சதவீதத்தை பங்குத் தொகையாகவும், 5 சதவீதத்தை கடனாகவும் வழங்கும். மீதமுள்ள 21 சதவீதத்தை மாநில அரசு, 15 சதவீதம் பங்குத் தொகையாகவும் ஆறு சதவீதம் கடனாகவும் வழங்கும்.முதற்கட்டமாக, இரண்டு வழித்தடங்கள், அவற்றின் ஒட்டுமொத்த நீளமான 45 கி.மீ., அளவுக்கு அமைக்கப்படும்.

இதில், 24 கி.மீ., சுரங்கப் பாதையாகவும், 21 கி.மீ., உயர்த்தப்பட்ட பாதையாகவும் இருக்கும். முதல் வழித்தடத்தின் மொத்த நீளம் 23.1 கி.மீ., இது வண்ணாரப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை அமைக்கப்படும். இரண்டாவது வழித்தடத்தின் மொத்த நீளம் 22 கி.மீ., இது சென்னை சென்ட்ரல் முதல் கோயம்பேடு வழியாக, மவுன்ட் வரை அமைக்கப்படும்.இத்திட்டம் முழுவதும் 2014-15ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் என்ற சிறப்பு வகை நிறுவனம் மூலமாக நிறை வேற்றப்படும். டில்லி மெட்ரோ ரயில் திட்டம் போலவே, மத்திய அரசும், மாநில அரசும் சமமான அளவு பங்குத் தொகை வழங்கும்.இதர பொது மற்றும் தனியார் போக்கு வரத்துகளான பஸ், புறநகர் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்துடன் ஒருங்கிணைக் கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு கவனம் எடுக்கப் பட்டுள்ளது.

எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி எடுத்துச் செல்வதற்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்துக்கு, முடிந்த வரை அரசு நிலம் பயன்படுத்திக் கொள்ளப்படும். தேவைப்படும் தனியார் நிலங்கள், இணக்கமான முறையில், சந்தை விலையை கருத்தில் கொண்டு வாங்கப்படும். பேச்சுவார்த்தை சாதகமாக இல்லாவிட்டால், கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

திட்டம் துவக்கப்பட்ட பின், ஐந்து நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகருக்கு 14 நிமிடத்தில் சென்றுவிட முடியும். மண்ணடியிலிருந்து விமான நிலையம் செல்ல 44 நிமிடங்களாகும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.