அடைக்கலம் புகுந்த பெண்கள் கொலை : ராணுவம் மீது புலிகள் குற்றச்சாட்டு

அரசு முகாம்களில் அடைக்கலம் புகுந்த பொதுமக்களில் இளைஞர்களும், பெண்களும், இலங்கை புலனாய்வுத் துறையினரால் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு, காடுகளிலும், மயானங்களிலும் புதைக்கப்படுவதாக விடுதலைப் புலிகள் தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.

வன்னி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள பொதுமக்களின் குழந்தைகளுக்காக, வவுனியா மனிக்பாம் முகாமில் இரண்டு தற்காலிக பள்ளிக்கூடங்கள், வரும் திங்கட் கிழமை முதல் இயங்கவுள்ளன. மாணவர்களுக்கு தேவையான சீருடைகள், பாடப்புத்தகங்கள், பள்ளிக்கூட உபகரணங்கள், வரும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும் என வவுனியா கல்வி மைய பணியாளர் ரஞ்ஜனி ஒஸ்வல்ட் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா சென்று அரசு முகாம்களில் அடைக்கலம் புகுந்த பொதுமக்களில் இளைஞர்களும், பெண்களும், இலங்கை புலனாய்வுத் துறையினரால் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு, காடுகளிலும், மயானங்களிலும் புதைக்கப்படுவதாக விடுதலைப் புலிகள் தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன.
அரசு முகாம்களுக்கு வரும் பெண்கள் பலர் விசாரணைக்காக ரகசிய முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு எரிக்கப்படுவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனுராதபுரம், பொலநறுவையில் உள்ள மயானங்கள், காட்டுப்பகுதிகள் மற்றும் வவுனியாவில் உள்ள மக்கள் நடமாட்டமற்ற பகுதிகளில் கொல்லப்படும் இளைஞர்களின் உடல்களும் புதைக்கப்படுவதாகவும், பெண்களின் உடல்கள் எரிக்கப்படுவதாகவும் இவற்றை நேரில் பார்த்த இலங்கைத் தொழிலாளர்கள், அனுராதபுரத்தில் உள்ள செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். சில வாரங்களில் 25 இளைஞர்கள், 27 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். “காணாமல் போன அல்லது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தங்களது உறவுகள் குறித்து வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் கூட முறையிட முடியாத நிலை உள்ளது’ என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்ததாக புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு பிரபாகரனா? : ராஜபக்ஷே சவால் : ““பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே விடுதலைப் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகள் மெதுவாக மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையில் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க மாட்டேன்,” என இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். அரசு முகாம்களில் தஞ்சமடையும் இளைஞர்களும், பெண்களும் இலங்கை புலனாய்வுத் துறையினரால் கடத்தப்பட்டு, கொல்லப்படுவதாக விடுதலைப் புலி ஆதரவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே விடுதலைப் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கைகள் மெதுவாக மேற்கொள்ளப்படுகின்றன. அரசு, வடக்கே எடுத்துவரும் நடவடிக்கைகள் புலிகளின் பிடியில் உள்ள அப்பாவித் தமிழ் மக்களை விடுவிப்பதற்கே தவிர, தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. இலங்கையில் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க மாட்டேன். ஊடகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது. பத்திரிகையாளர்களை தாக்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது. அரசு மிகவும் பலமான நிலையில் இருக்கும்போது, இத்தகைய கேவலமான வேலையைச் செய்ய வேண்டிய எந்தத் தேவையும் அரசுக்கு இல்லை. பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டபோது, அரசு மீது குற்றம் சுமத்துவது மிகவும் அபாண்டமான செயல். பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராஜபக்ஷே கூறியுள்ளார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.