சந்திரயான் -1 விண்கலம் 100வது நாள் வெற்றி விழா

பெங்களூரு : கடந்த வருடத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி பதிவேட்டில் ஒரு மைல்கல்லாக அமைந்ததது , சந்திரயான்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது . கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி சந்திரயான்-1 விண்ணில் ஏவப்பட்டது.

சந்திரயான்-1 விண்கலம் நிலவில் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து இன்றுடன் வெற்றிகரமாக 100வது நாள் ஆகிறது. இதை கொண்டாடும் வகையில் இந்தியா மற்றும் சில வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 100 விஞ்ஞானிகள் இன்று பெங்களூருவில் நடக்கும் வெற்றி விழாவில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகின்றனர். விஞ்ஞானிகள் சந்திரயான் -1 விண்கலம் சேகரித்த முக்கியத் தகவல்கள் குறித்து ஆய்வு செய்யவிருக்கிறார்கள். இத்தகவலை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். சந்திரயான்- 1 விண்கலத்தினால் விண்ணில் இறக்கப்பட்டுள்ள ‘ மூன் இம்பாக்டர் பிரோப் ‘ நிலவின் வியத்தகு படங்களை அனுப்பியுள்ளது. இதுவரை யாருமே கண்டிராத கோணங்களில் புகைப்படங்களை ‘ மூன் இம்பாக்டர் பிரோப் ‘ எடுத்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் புகைப்படங்கள் தற்போதைக்கு இஸ்ரோவிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரயான் -1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் : குழந்தை சந்திரயான் -1 நலமாக இருக்கிறது. அத்துடன் செலுத்தப்பட்ட 11 கருவிகளும் சிறப்பாக இயங்குகின்றன. இந்தியாவின் இந்த சாதனை பயணம் நிலவு குறித்த இதுவரை புரியாமல் இருந்த புதிரை நீக்கி, விசித்திரமாக தோன்றியவற்றிற்கு விளக்கம் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார். இன்று பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஈசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் சில விஞ்ஞானிகளும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

Source &thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.