வேலை இழந்ததால் விரக்தி – மனைவி, 5 குழந்தைகளைக் கொன்று அமெரிக்கர் தற்கொலை

லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்காவில் வேலை இழந்ததால் விரக்தி அடைந்த நபர், தனது மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் அருகே இந்த பயங்கரம் நடந்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகளில் நான்கு பேர் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து காவல்துறை துணை அதிகாரி கென்னத் கார்னர் கூறுகையில், தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் எர்வின் அன்டோனியோ லூபோ. அவரது மனைவி பெயர் அனா. இவர்களது வீடு வில்மிங்டன் என்ற பகுதியில் உள்ளது.

அந்த நபர் இந்த செயலை செய்வதற்கு முன்பு பர்பாங்க் டிவி நிறுவனத்திற்கு டைப் செய்யப்பட்ட ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் தான் செய்யப் போகும் காரியத்தை விளக்கியிருந்தார்.

இதையடுத்து அந்த டிவி நிறுவனம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வில்மிங்டன் விரைந்தனர்.

சம்பந்தப்பட்ட வீட்டை அடைந்தபோது அங்கு அனைவரும் பிணமாகக் கிடந்தனர். முதலில் தனது மனைவி, எட்டு வயது மகள், ஐந்து வயதாகும் இரட்டையரான இரு மகள்கள் மற்றும் 2 வயதாகும் இரட்டையரான இரு மகன்களை சுட்டுக் கொன்ற அந்த நபர் பின்னர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட நபரும், அவரது மனைவியும் மருத்துவத்துறையில் டெக்னீஷியன்களாகப் பணி புரிந்தனர். சமீபத்தில் இருவரும் வேலை இழந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த இருவரும் குழந்தைகளைக் கொன்று விட்டுத் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்

Source & Thanks : www.aol.in/tamil

Leave a Reply

Your email address will not be published.