ஏவுகணை நிறுத்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ரஷ்யா சாதக சமிக்ஞை

அமெரிக்காவுடன் கசப்பான புரிந்துணர்வின்மைக்கு வழி செய்த ஏவுகணை பாதுகாப்புத்திட்டம் குறித்த முரண்பாட்டை தீர்க்க தாம் தயாராக இருப்பதாக ரஷ்ய அரசு கோடிகாட்டியுள்ளது.

போலந்துக்கும், லித்துவேனியாவுக்கும் இடையிலான ரஷ்ய பிராந்தியமான கலினின்கிராட்டில் இனியும் ஏவுகணையை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று தாம் உணர்வதாக ரஷ்ய இராணுவ அதிகாரி ஒருவர் ரஷ்ய செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஐரோப்பாவில் தனது சொந்த ஏவுகணை எதிர்ப்புத் தொகுதியை நிறுத்துவதற்கான திட்டத்தை வேகப்படுத்துவதில்லை என்று அமெரிக்காவின் புதிய அரசாங்கம் முடிவு செய்ததற்கு பதிலாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இந்த விவகாரத்துக்கு ஒரு தீர்வைக் காணமுடியும் என்ற சமிக்ஞையை அமெரிக்காவுக்கு ரஷ்யர்கள் அனுப்ப முயல்வதாக பிபிசியின் மாஸ்கோ செய்தியாளர் கூறுகிறார்.

Source & Thanks : www.bbc.co.uk/tamil

Leave a Reply

Your email address will not be published.