இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலையை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கையில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதனைக் கண்டித்து தமிழ்நாடு சென்னையில் ஊடகவியலாளர்கள் நேற்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இலங்கையில் கடந்த 2006 ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 16 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக முறையான நீதி விசாரணையோ, குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கையோ சிறிலங்கா அரசாங்கத்தால் இதுவரை நடத்தப்படவில்லை.

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் திடீரென கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும், முறையான காரணம் இல்லாமல் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

இதனைக் கண்டித்து, சென்னையில் ஊடகவியலாளர்கள் சார்பில் நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

கொலையுண்ட பத்திரிகையாளர்களின் நினைவாக 2 நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

கொலையான “சண்டே லீடர்’ ஆங்கில வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்படுவதற்கு முன்பு கடைசியாக எழுதிய தலையங்கம் வாசிக்கப்பட்டது.

அனைத்துலக விசாரணை வேண்டும்: “சுதந்திர எண்ணங்களுடன் போரை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.

இதுவரை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் கொலைகள், கடத்தல்கள், கைதுகள் குறித்து வெளிப்படையான அனைத்துலக விசாரணை நடத்த வேண்டும் என கூட்ட முடிவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உள்நாட்டுப் போரை காரணமாகச் சொல்லி அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் மீது குண்டுகள் வீசி படுகொலை செய்வதை நிறுத்த வேண்டும். உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.