கனடாவில் சிறிலங்கா துணைத் தூதரகத்தினை முற்றுகையிட்ட தமிழர்கள்

வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருப்பிடங்களை விட்டு துரத்தப்பட்ட மக்கள் மீது சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தாக்குதலைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் கனடாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ரொறன்ரோ மாநகரில் உள்ள சிறிலங்கா துணை தூதரகத்திற்குள் பிரவேசித்த தமிழ் மக்கள் அங்கிருந்த அதிகாரிகளை பார்த்து வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்கா அரச படைகள் மேற்கொள்கின்ற அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

மக்களின் கொந்தளிப்பை உணர்ந்து கொண்ட தூதரக அதிகாரிகள் கனடிய காவல்துறையினரின் உதவியினை நாடினர். ஆனாலும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் தூதரகத்திற்கு வெளியே நின்றபடி எதிர்ப்புக்களை தெரிவிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டனர்.

தொடக்கத்தில் குறைந்தளவான மக்கள் கலந்து கொண்டபோதும் உள்ளுர் தமிழ் வானொலிகள் இந்த நிகழ்ச்சியினை நேரடியாக ஒலிபரப்புச் செய்ய பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளோடும் மற்றும் முதியவர்கள் என பெருமளவான மக்கள் தூதரகத்திற்கு முன்னால் கூடி தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.

மக்களின் எதிர்ப்புக்கள் அதிகரித்ததால் அதிகாரிகள் தூதரகத்தின் செயற்பாடுகளை இடை நிறுத்தினர்.

காலையில் தொடங்கிய இக்கண்டன ஆர்ப்பாட்டம் மாலை வரை நீடித்தது. இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வினை ரொறன்ரோவின் முன்னணி ஆங்கில வானொலியான ஏஎம் 680 நேரடியாக ஒலிபரப்புச் செய்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று கனடாவின் முக்கிய சந்திகளில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கனடா வாழ் தமிழ் மக்களால் கண்டன எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.

Source & thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.