த.தே.கூ.வின் கதவடைப்பு போராட்டம்: ஒத்துழைப்பு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஒன்றியம் வேண்டுகோள்

தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை மறுநாள் ஏற்பாடு செய்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வன்னிப்பெரு நிலப்பரப்பில் அண்மைக்காலமாக சிறிலங்கா படையினரின் மிலேச்சத்தனமான எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களினால் பல நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் வருகின்றனர்.

இதனைக் கண்டித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கதவடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இப்போராட்டத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஒன்றியம் ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழரின் தாயக பூமியை இராணுவ வல்லாதிக்கம் கொண்டு கபளீகரம் செய்யும் நோக்கில் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழரின் தாயக பூமியில் இன்று இரத்த ஆறு ஓடிக்கொண்டுள்ளது.

எம் உடன்பிறப்புக்கள் இன்று யாருமே இல்லாத அநாதைகள் போல் தமது சொந்த மண்ணிலேயே அநாதைகளாக்கப்பட்டு, இராணுவ இயந்திரத்தின் அராஜகத்திற்குள் அகப்பட்டு நாள்தோறும் சிங்கள படையினரால் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றார்கள்.

அனைத்துலகத்தில் வாழும் எம் உறவுகள் எம்மக்களுக்காக குரல் கொடுத்தாலும் அனைத்துலக நாடுகளும், அனைத்துலக அமைப்புக்களும் எம்மக்களின் இன்னல்களை அறிக்கைகளை விடுவதோடு தங்களது பணிகளை மட்டுப்படுத்திக்கொள்கின்றன.

எம்மக்கள் சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டு அடுத்தவேளை உணவு இன்றியும் பல இன்னல்களை எதிர்கொண்டும் வாழ்கின்றார்கள்.

மறுபுறம் இளவயதினர் முதியோர், சிறுவர்கள் என்று வயது வேறுபாடின்றி சிங்களப் படையின் ஆயுதங்களுக்கு இரையாகி வரும் வேளையில் எம்மக்களின் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியாதவர்களாகவும் உதவ முடியாதவர்களாவும் நாம் இன்று நிற்கின்றோம்.

இந்த நிலையில் எம்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் காட்டுமிராண்டித்தனமான இராணுவ செயற்பாடுகளையும், எம் உறவுகளின் படுகொலைகளையும் சிங்கள அரசு உடன் நிறுத்த வேண்டும் எனக்கேட்பதோடு, வன்னியில் அல்லலுறும் மக்களுக்கு போதிய உணவு வசதிகளை அரசு செய்துகொடுக்க வேண்டும் எனவும், அம்மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளையும் ஏனைய வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறும் இந்த வேளையில் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இந்த வேளையிலே எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது 30.01.2009 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகளை கண்டிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ள கதவடைப்பு போராட்டத்துக்கு எமது முழுப்பங்களிப்பையும் வழங்குவோம்.

எமது மக்களின் துயரங்களை வெளியுலகிற்கு கொண்டு வரும் இந்த எளிய முயற்சியிலும், அதுபோல் எம்மக்களின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு சிங்கள அரசுக்கு கண்டணம் தெரிவிக்கும் இம்முயற்றியிலும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஆதரவு தெரிவித்து இந்த கதவடைப்பு வெற்றியளிக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.