சிறிலங்கா நிகழ்த்தி வரும் மனிதப் பேரவலத்தை கண்டித்து லண்டனில் 31 இல் கண்டன ஊர்வலம்

சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வன்னியில் நடத்தி வரும் மனிதப் பேரவலத்தைக் கண்டித்தும் அனைத்துலகத்திற்கு உணர்த்தும் வகையிலும் லண்டனில் நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் ஊர்வலத்தில் லண்டன் வாழ் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொண்டு பேரெழுச்சியைக் காட்ட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கம் நாளும் பொழுதும் வன்னியில் குறுகிய நிலப்பரப்புக்குள் வாழும் மக்கள் மீது கடுமையான வான்வெளி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தி மக்களை வகை தொகையின்றி அழித்து வருகின்றது.

இந்த மனிதப் பேரவலமும் படுகொலையும் இன்று உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

நாளாந்தம் மக்கள் டசின் கணக்கில் கொல்லப்படுவதுடன் நூற்றுக்கணக்கில் காயமடைந்தும் வருகின்றனர்.

இருக்க இடமின்றி உண்ண உணவின்றி நிம்மதியாக தூங்குவதற்கேனும் இடமின்றி அவர்கள் சொல்லொணாத் துன்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குண்டு வீச்சினால் பலியாகுபவர்களைக் கூட குடும்ப உறுப்பினர்கள் அடக்கம் செய்ய முடியாத பரிதாப நிலை தோன்றியுள்ளது.

காயமடைந்தவர்களுக்குக் கூட ஒழுங்கான மருத்துவ வசதியில்லை. இதனால் கடுமையான காயமடைந்தவர்களும் இறக்க நேரிடுகின்றது.

குண்டு வீச்சினால் தறிகெட்டு ஓடுபவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உயிருடன் இருக்கின்றனரா? அல்லது இறந்து விட்டனரா? என்ற நிலை தெரியாமல் தவித்தும் வருகின்றனர்.

மழை போல் பொழியும் குண்டு வீச்சுக்கு மத்தியில் எங்கும் மரண ஓலமே கேட்கின்றது. வீதிகள், வளவுகள் ஏன் வீடுகளுக்குள்ளும் தசைத் துண்டுகளும் பிண்டங்களுமே காணப்படுகின்றன.

இந்த தமிழின அழிப்பையும் மனித அவலத்தையும் அனைத்துலக சமூகம் மௌனமாக இருந்து ஆதரித்து வருகின்றது.

இந்நிலையில் தாயகத்தில் ஏற்பட்டுள்ள அந்த மக்களின் அவலத்தை தடுத்து நிறுத்தும் பொறுப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் கையிலேயே தங்கியுள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களை மதித்து ஓரணியில் திரண்டு அரசியல் ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் அனைத்துலகத்திற்கு எமது ஒற்றுமையையும் பலத்தையும் காட்டி அனைத்துலகத்தின் கண்களைத் திறக்க வைக்க வேண்டும்.

இது புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழ் மக்களினதும் இன்றைய கடமையாகும் என்பதை மறக்க வேண்டாம்.

எனவே அன்பான லண்டன் வாழ் தமிழ் மக்களே!

எதிர்வரும் 31 ஆம் நாள் நடைபெறவுள்ள எதிர்ப்பு ஊர்வலத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென நான் கேட்டுக் கொள்கின்றேன்.

“ஓன்று பட்டால் உண்டு வாழ்வு” என்பதைப்போல ஒவ்வொருவரும் தங்களுடைய தேசத்தின் கடமையாக நினைத்து இதில் அணிதிரள வேண்டும். மற்றவர்கள் இதில் கலந்து கொள்ளட்டும் நாம் எமது வேலையைப் பார்ப்போம் என்று வீட்டில் இருந்து விட்டால் எமது ஒன்றுமையை ஏனையவர்கள் எள்ளி நகையாட இடமுண்டு என்பதையும் நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

நாம் மானமுள்ள வீரமுள்ள தமிழர்கள் என்பதை மாத்திரமல்ல ஒற்றுமையான தமிழர்கள் என்பதையும் இந்த நாட்டுக்கு நீங்கள் எடுத்துக்காட்ட வேண்டும்.

எனவே லண்டனில் உள்ள

தமிழ் அமைப்புக்கள்

பாடசாலைகள்

வர்த்தக நிறுவனத்தினர்

பொது மக்கள்

என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

வர்த்தக நிறுவனத்தினர் தமது வியாபார நிலையங்களை அன்றைய நாள் மூடுவதன் மூலமும் ஏனைய சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக அமையும் என்பதையும் கவனத்தில் கொள்வதுடன் இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கி எமது உணர்வை அவலத்திற்கு உள்ளாகியுள்ள தாயக மக்களுக்காக வெளிக்காட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் அவர் வலியுறுத்தினார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.