இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதியை மீறியது சிறிலங்கா அரசு; மீண்டும் தமிழர்கள் மீது தாக்குதல்: 21 பேர் படுகொலை; 121 பேர் காயம்

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கி 12 மணிநேரத்துக்குள்ளாகவே தமிழ் மக்கள் 10 பேரை சிங்கள அரசு படுகொலை செய்துள்ளது.

இன்று புதன்கிழமை பிற்பகல் 1:00 மணி தொடக்கம் பிற்பகல் 2:30 நிமிடம் வரை இடைவிடாத எறிகணைத் தாக்குதல்கள் நடைபெற்றதாக வன்னி தகல்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று இந்தியாவுக்கு வாக்குறுதி வழங்கி 12 மணிநேரத்தில் வன்னிப்பெரு நிலப்பரப்பில் தமிழ் மக்கள் 21 பேர் மகிந்த அரசாங்கத்தின் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தி வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு சென்று நேற்று செவ்வாய்க்கிழமை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார்.

ஆனால், 12 மணி நேரத்தில் அதுவும் பிரணாப் முகர்ஜி கொழும்பில் இருந்து புதுடில்லிக்கு புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் வன்னியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்ததாக கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தும் இருந்தார்.

இந்த நிலையிலேயே “மக்கள் பாதுகாப்பு வலய”ப் பகுதிகளான உடையார்கட்டு, மூங்கிலாறு, தேவிபுரம், சுதந்திரபுரம், வல்லிபுனம் ஆகிய பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கி தாக்குதல்கள் மக்கள் மீது நடத்தப்பட்டுள்ளதாக அவதானிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவில் உள்ள காந்தி சிறுவர் பராமரிப்பு இல்லம் மீது இன்று புதன்கிழமை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதேவேளை, உடையார்கட்டு, தேவிபுரம், வல்லிபுனம் பகுதிகளில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் 45 பேர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு மருத்துவமனை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தகவல் தருகையில்,

இன்று வரையில் காயமடைந்தவர்களில் 556 பேர் மருத்துவமனையில் தற்போதும் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 200 பேர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா கொண்டு செல்லப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

வன்னியில் உள்ள அமெரிக்க மிசன் திருச்சபையின் முறிகண்டி பங்குத்தந்தை மதகுருவான ஆனந்தராஜாவும் இன்றைய எறிகணைத் தாக்குதலில் காயமடைந்துள்ளார். இவரின் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் விழுந்த எறிகணையினால் காயமடைந்த இவருடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இந்த 3 பேரும் முறிகண்டி திருச்சபையில் கல்வி பயலும் மாணவர்கள் என்று மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

Source & Thanks : puthinam .com

Leave a Reply

Your email address will not be published.