8 குழந்தை பெற்ற பெண் கலிபோர்னியாவில் சாதனை

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகள் பிறந்துள்ளது. அமெரிக்க மருத்துவ வரலாற்றிலேயே ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தை பெற்ற இரண்டாவது பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் <உள்ள பெல்பிளவர் பகுதியில் உள்ள கெய்சர் பெர்மனன்டி மருத்துவமனையில் ஒரு பெண்ணிற்கு, நேற்று முன்தினம் ஒரே பிரசவத்தில் எட்டு குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் கருப்பையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டன. இந்த குழந்தைகள் 0.62 கி.கி., முதல் 1.42 கி.கி., வரையிலான எடையுடன் இருந்தன. இந்த குழந்தைகள் வழக்கமான கர்ப்ப காலத்துக்கு முன் ஒன்பது வாரங்களுக்கு இருக்கும் போது அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டன. ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்த குழந்தைகள் அனைத்தும் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தலைமை மருத்துவர் ஹரால்டு ஹென்றி கூறுகையில், “கருப்பையில் அதிக குழந்தைகள் இருக்கும் போது, அல்ட்ரா சவுண்ட் மூலம் குழந்தைகளின் எண்ணிக் கையை கணிப்பது, மிகவும் சிரமம். அதனால் தான் நாங்கள் ஏழு குழந்தைகள் இருக்கலாம் என கணித்திருந்தோம். இதில், மூன்று குழந்தைகள் வசதியாக சுவாசிக்க உரிய சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மற்ற குழந்தைகளுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. குழந்தைகள் ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை இன்குபேட்டரிலும் 10 வாரங்கள் வரை மருத்துவமனையிலும் இருப்பார்கள். தாய் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமுடன் உள்ளனர்’ என்றார். இதே போல் 1998ம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள ஹுஸ்டன் பகுதியில் ஒரு பெண்ணிற்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. இதில், ஒரு குழந்தை ஒரு வாரத்தில் இறந்து விட்டது. மற்ற குழந்தைகள் கடந்த மாதம் தங்களது 10வது பிறந்த நாளைக் கொண்டாடினர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.