முஸ்லிம் நாடு ஒன்றின் தலைநகரிலிருந்து உரை நிகழ்த்த அதிபர் ஒபாமா விருப்பம்

வாஷிங்டன் : “பதவியேற்ற நூறு நாட்களுக்குள் முஸ்லிம் நாடு ஒன்றின் தலைநகரிலிருந்து உலக முஸ்லிம் மக்களுக்கு உரை நிகழ்த்துவேன்’ என, அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். பல்வேறு பிரச்னைகளில், அமெரிக்கா மீது முஸ்லிம் நாடுகள் கடும் கோபம் கொண்டுள் ளன. அந்த நாடுகளிடமும், அங்கு வசிக்கும் மக்களிடமும் தனது சமாதான மற்றும் இணக்கமான குணத்தை காட்ட முற்பட்டுள் ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.


அதன் ஒரு பகுதியாக, துபாயைச் சேர்ந்த அல்- அரேபியா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: சமீபத்தில்தான் நான் பதவியேற்றேன். பதவியேற்ற நூறு நாட்களுக்குள் முஸ்லிம் நாடு ஒன்றின் தலைநகரில் இருந்து, முஸ்லிம் சமூக மக்களுக்கு உரை நிகழ்த்துவேன். வரக்கூடிய நாட்களில் முஸ்லிம் சமூகத்தினர் பயனடையும் வகையிலான பல நடவடிக்கைகளை எனது அரசு எடுக்கும். பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே அமைதியை உருவாக்க எனது நிர்வாகம் ஆட்சிக்காலம் முடியும் வரை காத்திருக்காது. அதனால், எனது தேர்தல் பிரசாரத்தில் அளித்த உறுதி மொழிகளை காப்பாற்ற, மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்காவின் தூதராக ஜார்ஜ் மிட்செல்லை அனுப்பியுள்ளேன்.

நாங்கள் இப்போது துவங்கியுள்ள இந்த நல்ல விஷயம் முடிவுக்கு கொண்டுவர நீண்ட நாட்களா கலாம். கியூபாவில் உள்ள குவாண்டனமோ சிறையை மூட முடிவெடுத்ததன் மூலம், எனது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை முஸ்லிம் சமூகத்தினர் அறிந்து கொள்ளலாம். அதேபோல், ஈராக்கில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக அளித்த உறுதி மொழிகளையும் காப்பாற்றுவேன்.

அழிக்கும் வேலை: கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் அல்-குவைதா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதனால், அமெரிக்கா வீழ்ந்து விடவில்லை. அதிலிருந்தே, அல்-குவைதா தலைவர்களின் கொள்கைகள் எல்லாம் திவாலானவை என்பதை அறிந்து கொள்ளலாம். “நீங்கள் எதை உருவாக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தே, மற்றவர்கள் உங்களைப் பற்றி முடிவு செய்வர். எதை அழிக்கிறீர்கள் என்பதை பொறுத்தல்ல. அதேபோல, அல்-குவைதா தலைவர்கள் எல்லாம், அழிக்கும் வேலையைதான் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் இந்தப் பாதை அதிகளவிலான உயிரிழப்புகளையும், அழிவையும் ஏற்படுத்துமே அன்றி, அமைதியை உருவாக்காது. இதை முஸ்லிம் நாடுகளும் நன்கறியும். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அந்நாடு முட்டியை உயர்த்தி சண்டைக்கு வந்தால், எங்களின் கையும் நீளும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பராக் ஒபாமா கூறியுள்ளார்.

மெரிக்க நிதி அமைச்சர் இந்தியாவில் படித்தவர்: வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் புதிய அரசில், நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமோதி கெய்த்னர், டில்லியில் ஆரம்ப கல்வி பயின்றவர் என, தெரியவந்துள்ளது. இவர் அமெரிக்காவின் 75வது நிதி அமைச்சர். இவரின் தந்தை பீட்டர் எப். கெய்த்னர், போர்டு பவுன்டேஷனில் பல ஆண்டுகளாக பணியாற்றினார். அப்போது இந்தியா, நேபாளம், இலங்கை போன்ற பல ஆசிய நாடுகளில் பல பொறுப்புகளை வகித்தார். அவர் டில்லியில் தங்கியிருந்த போதுதான், திமோதி கெய்த்னர் அங்கு ஆரம்ப கல்வி பயின்றார். பின்னர் அமெரிக்காவில் பட்டப்படிப்பையும், முதுகலை பட்டப்படிப்பையும் முடித்தார். சமீப நாட்கள் வரை நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக பணியாற்றினார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.